மாநில அரசு தொடர்ந்து மதிப்பீட்டு வரிக்கான தள்ளுப்படி வழங்குவதாக அறிவித்தது- ஜெக்டிப்

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம்
இந்த ஆண்டும் தொடர்ந்து மதிப்பீட்டு வரிக்கான தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தால் ஏற்படும் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில உள்ளூராட்சி, வீடமைப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அறிவித்தார்.

“இச்சலுகை பினாங்கு தீவு மற்றும் பெருநிலப்பகுதியில் வசிக்கும் சுமார் 649,950 குடியிருப்பாளர்களுக்குப் பயனளிக்கும்.

“இந்த ஆண்டு குறைந்த விலை, குறைந்த நடுத்தர விலை மற்றும் கிராம வீட்டு உரிமையாளர்களுக்கு முழு (100%) மதிப்பீட்டு வரி தள்ளுபடி வழங்கப்படும்.

“மற்ற பிரிவுகள் சேர்ந்த உரிமையாளர்களுக்கு 50 விழுக்காடுக்கான தள்ளுபடி வழங்கப்படும்,” என்று ஜெக்டிப் ஜாலான் மெக்கலிஸ்டரில் உள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் கலந்து கொண்டார்.

ஜெக்டிப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டிற்கான பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரு ஊராட்சி கழகங்களும் ரிம25 மில்லியன் வரையிலான மதிப்பீட்டு வரி தள்ளுபடியை வழங்குகின்றது.

“இந்த அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்குவதன் மூலம் மாநில அரசு பொது மக்களை குறிப்பாக இம்மாதிரியான கடினமான காலங்களில் கவனித்துக்கொள்வதை நிரூபிக்கிறது.

“எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி அடிப்படை சேவைகளை மேம்படுத்துவதில் குறிப்பாக கழிவு சேகரிப்பு மற்றும் பொது துப்புரவு சேவைகளின் அடிப்படையில் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

“பொதுவாகவே, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் எஸ்.ஓ.பி-க்கு இணங்குவதை இரண்டு ஊராட்டு ஊராட்சி கழகங்களும் உறுதிப்படுத்தும்.

“ஊராட்சி மன்றங்கள் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்குவதோடு பினாங்கு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்” என அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து பினாங்கில் அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகள் தொடர்பாக ஜெக்டிப் கருத்துரைத்தார்.

பினாங்கில் அதிகரித்து வரும் வழக்குகள் அதிகமாக கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது நடத்திய திரையிடல் மூலம் பதிவுப்பெற்றதாகும்.

“எனவே, அனைத்து பினாங்கு வாழ் மக்களும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கோவிட் -19 தொற்றுநோயை துச்சமாக கருத வேண்டாம்.

“கோவிட் -19 தொற்றுநோயிக்கான தடுப்பூசி பினாங்கு மாநிலத்திற்கு வரும் வரை, நம்மிடம் இருக்கும் ஒரே தடுப்பூசி எஸ்.ஓ.பி-களை முழுமையாகப் பின்பற்றி இணங்குதல் ஆகும்.

“எனவே, நாம் வெளியில் இருக்கும் வேளையில் முகக் கவசத்தை அணிந்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என கூறினார்.

முன்னதாக, மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் ஏற்பாட்டில் நடைபெற்ற பள்ளிக்கு மீண்டும் செல்வோம் என்ற திட்டத்திற்காக ஜெக்டிப் 200 வசதிக்குறைந்த மாணவர்களுக்கு பள்ளிக்கூட உபகரணங்களுக்கான பற்றுச்சீட்டை வழங்கினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ மாணவர்களுக்கு பற்றுச்சீட்டு எடுத்து வழங்கினார்.

” இத்திட்டம் மூன்றாவது ஆண்டாக நடைப்பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வசதிக்குறைந்த மாணவர்களை தேர்வுச்செய்து இவ்வுதவி வழங்கப்படுகிறது. இது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புவதாக,” பினாங்கு இந்துதர்ம மாமன்ற தலைவர் தனபாலன் குறிப்பிட்டார்.

பினாங்கு இந்துதர்ம மாமன்றம் தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க வேண்டும் என்று ஜெக்டிப் கேட்டுக் கொண்டார்.