மாநில அரசு பயணப் படகு மேம்பாட்டுத் திட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சின் அறிக்கைக்காக காத்திருக்கிறது

Admin
  1. ஜார்ச்டவுன் – மாநில அரசு புதிய பயணப் படகு சேவை மேம்படுத்துவதற்கும் இயக்குவதற்கும் ஒட்டுமொத்த திட்டமிடல் திட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சின் (எம்.ஒ.தி) முழு அறிக்கைக்காக இன்னும் காத்திருக்கிறது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சருடனான சந்திப்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

“அக்கூட்டத்தின் போது, போக்குவரத்து அமைச்சு பயணப் படகு சேவை செயல்பாடு மற்றும் பயணப் படகு முனையத்தின் அடிப்படை புதுப்பித்தல் பணிகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இருப்பினும், மாநில அரசாங்கத்திடம் போக்குவரத்து அமைச்சு முழு அறிக்கை வழங்க காத்திருக்கிறோம்,” என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

தற்போதைய பயணப் படகு சேவை பயணிகள் மட்டுமின்றி மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் இதர வாகனங்களை சுமந்து செல்லும் வசதிகளைக் கொண்டது. இது குறித்து போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடியதாக போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.

“மாநில அரசு முன்மொழியும் புதிய பயணப் படகுகளின் பயன்பாடு குறித்து போக்குவரத்து அமைச்சு ஒப்புதல் வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் முழு அறிக்கையைப் பெறுவதற்கு மாநில அரசோ அல்லது போக்குவரத்து அமைச்சோ எவ்வித காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என்று கூறினார்.

மேலும், புதிய பயணப் படகுகள் வாங்குவதற்கும் தொடர்புடைய பணிகளை ஆரம்பிக்கவும் மத்திய அரசு ரிம30 மில்லியன் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்தது பாராட்டக்குரியதாகும்.

முன்னதாக, பெறப்பட்ட அறிவிப்பின் மூலம் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பினாங்கு பயணப் படகு சேவையை மலேசியா பிரசாரனா பெர்ஹாட் (பிரசரணா) நிறுவனத்திடம் இருந்து பினாங்கு போர்ட் சென். பெர்ஹாட் (பி.பி.எஸ்.பி) நிறுவனம் நிர்வகிக்கும்.

மேலும், பயணப் படகு முனையத்தின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுப்பெற மூன்று மாத கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.