டிஜித்தல்மயமாக்கல் துறையில் இளைஞர்கள் பங்களிப்பு அதிகரிக்க உத்வேகம்

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் (பி.ஒய்.டி.சி), வலைத்தள மேம்பாட்டு நிறுவனமான பிக் டொமைன் தனியார் நிறுவனத்துடன் இணைந்து டிஜித்தல் இளைஞர்களை உருவாக்குவதற்கான புதிய முயற்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கூறுகையில், வருகின்ற இரண்டு ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கல் துறையில் திறன் மிக்க இளைஞர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகத் திகழ்கிறது, என்றார்.

“பினாங்கு2030 கொள்கைக்கு ஏற்ப பினாங்கை ஒரு டிஜிட்டல் மையமாக மாற்றுவதோடு வீட்டு வருமானத்தை அதிகரிப்பது மற்றொரு முதன்மை நோக்கமாக விளங்குகிறது.

“இதனிடையே, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (எஸ்.எம்.இ) டிஜிட்டல் மாற்றத்தின் செயல்பாடு ஆதரிப்பதன் மூலம் பினாங்கில் இளைஞர்களுக்கு 1,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

” இத்திட்டம் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் குறுகிய கால பொருளாதாரம் மேம்பாட்டை உருவாக்க வித்திடும்.

“எனவே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், ஒப்புக் கொள்ளப்பட்ட பல்வேறு பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் புதிய டிஜிட்டல் திறமைகள் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது,” என்று கொம்தாரில் பி.ஒய்.டி.சி மற்றும் பிக் டொமைனுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் மாநில முதல்வர் சாவ் இவ்வாறு உரையாற்றினார்.

முதல்வரின் கூற்றுப்படி, கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், பிக் டொமைனுடன் பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து பயிற்சி மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கல் துறையில் அறிவையும் அனுபவத்தையும் பரிமாற ஒப்புக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.

” இந்த இரண்டு தரப்பினரும் தொழில் யுத்திகள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட தொழில் வாய்ப்புகள் உருவாக்குவதோடு பயனளிக்கும் திட்டங்கள் அவ்வபோது நடத்த ஒப்புக்கொள்கின்றன.

“இந்த திட்டத்தின் மூலம் டிஜிட்டல் சேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறமைகளை உருவாக்கும் ஒரு தொடர்பு ஊடகமாக அமையும்,” என சாவ் விளக்கமளித்தார்.

இத்திட்டத்தை வழிநடத்தும் நிறுவனமான
பிக் டொமைன் டிஜித்தல் பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த
Moden Academy, EVO Marketing, Digital Marketing Network மற்றும் KK eCommerce ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தும்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்; மலேசிய குடிமகன் மற்றும் பினாங்கில் பிறந்தவர்; அல்லது பதிவு நாள் அன்று குறைந்தது மூன்று வருடங்கள் பினாங்கில் வசிப்பவராக இருக்கு வேண்டும்.

பினாங்கு டிஜிட்டல் திறமைக் களம் திட்டத்தில் பங்கேற்க இளைஞர்கள் அழைக்கப்படுகின்றனர்