மாநில அரசு முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான நிதி உதவி வழங்க பரிசீலிக்கும் – முதல்வர்

Admin

பெராபிட் – பினாங்கு மாநில அரசு கோவிட்-19 தொற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலத்திற்கும் நிதி உதவி வழங்க பரிசீலித்து வருகிறது. இந்த உதவி மாநில ரிபி (இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலம்) நிதியத்தின் கீழ் உதவிகள் வழங்க பரிசீலிக்கப்படும் என்று பினாங்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கூறினார்.

“முன்னதாக மாநில அரசு, பினாங்கு இஸ்லாமிய மத கழகத்தின் (MAINPP) மூலம், மசூதிகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. எனவே முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கும் உதவிகள் வழங்க வேண்டும்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமலாக்கத்தால், வழிபாட்டு தலங்கள் நிர்வாகத்தினர் நிர்வாகச் செலவினங்கள் மற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தை செலுத்தவும் சிரமப்படுகின்றனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

“முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இல்லங்களில் பெரும்பாலானவை பொது நன்கொடைகள் மற்றும் பக்தர்களின் பங்களிப்புகளை சார்ந்துள்ளது, இவை அனைத்தும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, தற்போதைய நிலைமையை எதிர்கொள்ள மாநில அரசு இயன்ற நிதி உதவியை நல்கும்,” என புக்கிட் மெர்தாஜாமில் அமைந்துள்ள சென்.என் தேவாலயத்திற்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் மாநில முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் உடன் பெராபிட் சட்டமன்ற உறுப்பினர் ஹெங் லீ லீ, ஃபாதர் ரெவென்ட் டெகான் லாசாரூஸ் எந்தோனி கொனாதன் மற்றும் தேவலயத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது (பி.கே.பி.பி) முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பதன் மூலம், பக்தர்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் பல வழிபாட்டு தலங்களுக்கு தொடர்ந்து நன்கொடை அளிப்பார்கள் என்றும் சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக சென்.என் தேவாலயத்தின் வருடாந்திர கொண்டாட்டமான செயிண்ட் அன் திருவிழா இந்த ஆண்டு இணைய வழி ஒளிப்பரப்பப்படும். இந்த தேவாலயம் பத்து நாட்களுக்கு (24 ஜூலை தொடங்கி 2 ஆகஸ்ட் வரை) பொதுமக்கள் வருகையளிக்க தடைவிதிக்கப்படும். பிராத்தனைகள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு தேவாலயத்தின் முகநூல் https://www.minorbasilicastannebm.com/ வாயிலாக மலாய்மொழி, ஆங்கிலம், தமிழ் மற்றும் சீனமொழியில் ஒளிப்பரப்படும் என்று ஜொனாதன் கூறினார். புகழ்பெற்ற இந்த கொண்டாட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருகையளிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.