மாநில அரசு ரிம93.17 மில்லியன் உபரி பதிவு – முதலமைச்சர்

Admin
6517e0f3 200a 4c79 a40f cbace3573ac4

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு தொடர்ந்து சிறப்பான நிதி செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. இவ்வாண்டு மே,13 அன்று நிலவரப்படி ரிம93.17 மில்லியன் அளவிலான உபரியை(surplus) பதிவு செய்து வலுவான நிதிநிலையை அடைந்துள்ளது.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தனது நிறைவு உரையில், இந்த சாதனை கடுமையான நிதி ஒழுக்கமும் திறமையான வருவாய் மேலாண்மையும் வாயிலாக ஈட்டப்பட்டது என கூறினார்.

உலகளாவிய நடப்பு சவால்கள் மத்தியில் மாநிலத்தின் பொருளாதாரத் தாங்கும் திறனை இது நிரூபிப்பதாகவும் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வருவாய் கணக்கு (AHD) அறிக்கையின் அடிப்படையில், மாநில அரசு வரி வருவாய், வரியற்ற வருவாய் மற்றும் பிற வருவாய்கள் மூலம் மொத்தமாக ரிம403.39 மில்லியன் வசூலித்துள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளையில், நிர்வாகச் செலவினங்களில் மாநில அரசு சிக்கனக் கொள்கையை கடைப்பிடித்து, ரிம310.22 மில்லியன் மட்டுமே செலவு செய்ததாகவும் தெரிவித்தார்.

“ஒவ்வொரு ரிங்கிட்டும் கட்டுப்பாடுடனும் பொறுப்புடனும் செலவிடப்படுவதை உறுதி செய்வதன் மூலம் மாநில நிதி நிலைத்தன்மை பாதுகாக்கப்படுகிறது,” என்று அவர் இன்று நடைபெற்ற மாநில சட்டமன்ற கூட்டத்தில் சாவ் உரையாற்றினார்.

நில வரி திருத்தம் தொடர்பாக மக்களுக்கு மீண்டும் நன்மை பெறுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசாங்கத்திற்கு கிடைக்கும் கூடுதல் வருவாயின் ஒவ்வொரு சென்னும் மக்களின் நலனுக்காக செலவிடப்படும் என உறுதியளித்தார்.

மேலும், மாநில வருவாய் வலுப்படுத்தப்பட்டதன் பயன் நேரடியாக மக்களிடம் சேர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்காக நான்கு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படும்.

*அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு:
மக்கள் பயன்பாட்டிற்கு தரமான, நவீன மற்றும் திறன் வாய்ந்த பொது வசதிகளை உருவாக்குதல்.

*சமூகத்தை வலுப்படுத்த:i-Sejahtera போன்ற சமூகநலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துதல் மற்றும் பேரிடர் மேலாண்மை திறனை உயர்த்துதல்.

*பொருளாதார ஆதரவு: தொழில் துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (PKS) ஆகியவற்றை வலுப்படுத்தி, உயர்ந்த மதிப்புள்ள முதலீடுகளை ஊக்குவித்தல்.

*பசுமை நிலைத்தன்மை:
நிலையான வளர்ச்சிக்காக எரிசக்தி திறன் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குதல்.

மேலும், கூடுதல் வருவாய் ஒரு தனிப்பட்ட திட்டத்திற்கு மட்டும் ஒதுக்கப்படாமல், மாநில ஒருங்கிணைந்த நிதிக்குள் சேர்க்கப்பட்டு, காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மூலோபாய ரீதியில் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

“மாநில நிதியை வலுப்படுத்துவதும், மக்களின் வாழ்வாதாரச் சுமையை கருத்தில் கொள்வதும் ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலையை பேணுவது எங்கள் அரசின் அடிப்படை கொள்கையாகும். மாநில வளர்ச்சி நிலைத்தன்மையுடன் முன்னேற வேண்டும்; அதே நேரத்தில் மக்களின் நலனும் புறக்கணிக்கப்படக்கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.