மாநில அரசு வெள்ளப் பேரிடரை எதிர்க்கொள்ள தயார் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு வருகின்ற நவம்பர் மாதம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படும் வெள்ளப் பேரிடர் எதிர்கொள்வதற்காக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், இம்மாநில அனைத்து துறைகளும் முகவர்களும் இப்போது தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், இப்பேரிடரை எதிர்கொள்ள பல ஆயத்த நடவடிக்கைகளை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும், என்றார்.

“எனவே, மாநில அரசு வெள்ளப் பேரிடர் ஏற்பட்டால் அதனை நிர்வகிப்பதற்கு அனைத்து மாவட்ட மற்றும் நில அலுவலகங்களிலும் (PDT), மாநிலத் துறைகள் மற்றும் முகவர் நிலையங்களிலும் மூன்று மைய பிரதிநிதிகளை நியமிக்க முற்படுகிறது.

“மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவிற்கும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவே Focal Persons-களை நியமிக்கவுள்ளதாக,” மாநில முதல்வர் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பினாங்கு மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டுப் பட்டறையில்,
தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) ஒத்துழைப்போடு பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் நில அலுவலகங்கள், துறைகள் மற்றும் ஏஜென்சிகளும் கலந்து கொண்டன, என்றும் அவர் கூறினார்.

“70 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பட்டறையில், பேரிடர் மேலாண்மையின் அடிப்படை திறன்களை இன்னும் ஆழமாக புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் நடத்தப்பட்டது.

“மாநில நிதித் துறை
வெள்ளப் பேரிடர் மேலாண்மையை மேலும் வலுப்படுத்த ஆவணங்கள் அல்லது பொருட்கள் வாங்கும் நோக்கத்திற்காக ரிம400,000 ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் சொத்துக்கள் மற்றும் கையகப்படுத்துதல்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த சிறப்பு ஒதுக்கீடு அனைத்து மாவட்ட மற்றும் நில அலுவலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்,” என்று நிலம் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் தொலைதொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் விளக்கினார்.

அதுமட்டுமல்லாமல், மாநில அரசு 4,744 யூனிட் கூடாரங்களை (C- tent) நன்கொடையாகப் பெற்றது, அவை வெள்ளப் பேரிடரைச் சமாளிக்கும் பொருட்டு மாவட்ட மற்றும் நில அலுவலகங்களுக்கும் வழங்கியுள்ளது.

“இதனிடையே, கிராம சமூக மேலாண்மை கழகம் (MPKK), அரசு சாரா அமைப்புகள் (NGO), அவசரகால உதவி குழுக்கள் (ERT) மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட மற்றும் நில அலுவலகங்களுக்கும் வருகின்ற செப்டம்பர் 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தங்கள் தயார்நிலை குறித்த தகவல்களை அறிவிக்க வேண்டும்,” என சாவ் கூறினார்.

எனவே, அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், குறிப்பாக உள்ளூர் அதிகாரிகள் (PBT), நீர்ப்பாசனம் மற்றும் வடிக்கால் துறை (JPS) மற்றும் பொதுப்பணித் துறை (JKR) ஆகியவை மாநிலத்தின் வடிக்கால் அமைப்பு நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்யுமாறு கொன் இயோவ் நினைவூட்டினார்.

“மாநில வடிக்கால் மற்றும் நீர்ப்பாசன துறை மற்றும் பொதுப்பணி துறை இம்மாநிலத்தின் வடிக்கால் அமைப்பு குப்பைகளால் அடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில், இது வெள்ளம் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.

எனவே, பொது மக்கள் ஆற்றிலும், வடிக்கால் அமைப்பிலும் குப்பைகளை வீச வேண்டாம்,” என்று சாவ் அறிவுறுத்தினார்.