மின் கற்றல் கணினி திட்டத்தை மேம்படுத்த பெருநிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசின் மின் கற்றல் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில்
சோனி ஈ.எம்.சி.எஸ் மலேசியா சென்.பெர்ஹாட் நிறுவனம் மின்னனு கற்றல் உபகரணங்களை வழங்கியது.

இந்த தொழில்நுட்ப நிறுவனம் 134 கணினிகள் மற்றும் 55 விவேக கைப்பேசிகளை பினாங்கு அறிவியல் கிளாஸ்டர் மையத்திற்கு(பி.எஸ்.சி) வழங்கியது. அம்மையம் அதனை வசதி குறைந்த மாணவர்களுக்கு கொடுக்கும்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மாநில அரசின் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் சோனி ஈ.எம்.சி.எஸ் நிறுவனத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார். மேலும், இந்த ஆதரவின் மூலம் அதிகமான மாணவர்கள் கல்வித் துறையின் மின் கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்க வழிவகுக்கும்.

“இந்த ‘மின் கற்றல் கணினி திட்டம்’ பல்வேறு தொழில்துறை நிறுவனங்களின் வலுவான ஆதரவு இன்றி வெற்றிப்பெற வாய்ப்பே இல்லை.

” சோனி ஈ.எம்.சி.எஸ் மலேசியா போன்ற தொழில்துறை நிறுவனத்தின் பங்களிப்பு இத்திட்டத்தை செயல்படுத்துவதோடு வசதி குறைந்த மாணவர்களுக்கு பெரும் துணைபுரிகிறது.

“மாநில அரசு மற்றும் பி.எஸ்.சி மையத்தின் எதிர்கால திட்டங்களுக்கும் சோனி ஈ.எம்.சி.எஸ் மலேசியா நிறுவனம் நல் ஆதரவு வழங்கும் என நம்பிக்கை கொள்வதாக,” விஸ்மா யாப் சோர் ஈ கட்டடத்தில் இன்று நடைபெற்ற மின்னணு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தினால் இதுவரை 48 ஆன்லைன் பட்டறைகள் மற்றும் மூன்று
மெய்நிகர் போட்டிகள் நடத்தியதாக பி.எஸ்.சி தலைமை நிர்வாக அதிகாரி ஓய் பெங் ஈ கூறினார்.

“தற்போது கல்வி நடவடிக்கைகள் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. மின் கற்றல் கணினி திட்டத்திற்கு பங்களிப்பு நல்க அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வர வேண்டும்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சோனி ஈ.எம்.சி.எஸ் மலேசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கொய்ச்சி நகாமுரா கலந்து கொண்டார்.

மகளிர் & குடும்ப மேம்பாடு, பாலின ஈடுபாடு, இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தொழில்துறை நிறுவங்களின் ஆதரவு வரவேற்கத்தக்கது என்றார்.

இந்த சிறந்த திட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர் முன் வர வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

இதுவரை 466 வசதி குறைந்த மாணவர்கள் இத்திட்டம் வழி பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.