ஜார்ச்டவுன் – மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் தங்குமிடம் (CLQ) கட்டுமானத் திட்டம், நியமிக்கப்பட்ட பகுதிகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மிகவும் திட்டமிட்ட மற்றும் முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும்.
உள்ளூர் அரசு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லைய், தங்குமிட குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கான உயர் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பை மேம்படுத்துவதில் இந்த திட்டம் ஒரு பயனுள்ள வழிமுறையாகவும் இருக்கக்கூடும் என்றார்.
“CLQ திட்டம் கட்டிடங்கள் அல்லது வளாகங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் மாற்றுவதைக் குறைக்கலாம், இதனால் குடியிருப்புப் பகுதிகள் வெளிநாட்டு தொழிலாளர்களால் நிரப்பப்படுவதைத் தடுக்க இயலும்.
“கூடுதலாக, பணியாளர் தங்குமிடத்தை மையப்படுத்துவதன் மூலம் பொது சுகாதாரம், சுகாதாரக் கட்டுப்பாடு, தொற்று நோய்களைத் தடுத்தல், சிறந்த அளவிலான சுகாதாரத்தை உறுதி செய்ய சுகாதார நிறுவனங்கள் ஆய்வுகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதிக்கும்.”
“உண்மையில், வெளிநாட்டு தொழிலாளர்களை மையப்படுத்திய இந்த வேலைவாய்ப்பு, எந்தவொரு சட்ட அமலாக்கத்தையும் செயல்படுத்த அதிகாரிகளின் மேற்பார்வையை எளிதாக்கும்,” என்று அவர் 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் (DUN) மூன்றாவது பதவிக்காலத்தின் இரண்டாவது கூட்டத்தில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வில் இவ்வாறு கூறினார்.
புலாவ் பெத்தோங் மாநில சட்டமன்ற உறுப்பினர், முகமட் ஷுகோர் ஜகாரியாவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
இருப்பினும், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வகுத்துள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் இருந்தால் மட்டுமே CLQ கட்டுமானத்திற்கான ஒப்புதல் வழங்கப்படும் என்று மூய் லைய் வலியுறுத்தினார்.
“மாநில அரசும், பினாங்கு மாநகர கழகம் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் ஆகிய இரு உள்ளூர் அதிகாரிகளும், ஒவ்வொரு CLQ மேம்பாட்டு விண்ணப்பத்தையும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
“பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு CLQ திட்ட மேம்பாடும் தத்தம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
“சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் பினாங்கு மாநிலத்தில் பணியாளர் தங்குமிட கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கான வழிகாட்டுதல்கள் 2022 மற்றும் உள்ளூர் அதிகாரசபையால் நிர்ணயிக்கப்பட்ட ஏதேனும் நிபந்தனைகளுக்கு இணங்கினால் மட்டுமே ஒப்புதல் வழங்கப்படும்” என்று அவர் வலியுறுத்தினார்.
பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் குமரனின் துணை கேள்விக்கு பதிலளித்த மூய் லைய், தற்காலிக தொழிலாளர் தங்குமிடத்திற்கு (CLQ) வழங்கப்பட்ட ஒப்புதல் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும், ithu மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமானது என்று விளக்கினார்.
அவரைப் பொறுத்தவரை, பினாங்கு மாநில உள்ளாட்சிப் பகுதிகளில் தற்காலிக பணியாளர் தங்குமிடத்தைத் திட்டமிடுவதற்கான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது, இது ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்தது.
“அனைத்து தரப்பினரின் நலன்களின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டு, பிப்ரவரி 12, 2025 அன்று அமைச்சரவை கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்டு, மார்ச் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்தது.”
“உள்ளூர்வாசிகளிடையே வெளிநாட்டினரை பணியமர்த்துவதால் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தைக் குறைப்பதற்கும், அவர்களின் நல்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், தொழிலாளர் தங்குமிடப் பிரச்சனையைச் சமாளிக்க மாநில அரசு எடுத்த குறுகிய கால தீர்வாக இது உள்ளது” என்று அவர் விளக்கினார்.
மேலும் கருத்து தெரிவித்த மூய் லைய், டிசம்பர் 31, 2025-க்குப் பிறகு எந்தவொரு புதிய TLQ விண்ணப்பங்களையும் மாநில அரசு இனி பரிசீலிக்காது என்று தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தில் தொழிலாளர் தங்குமிட கட்டுமானத்திற்கான திட்டமிடல் வழிகாட்டுதல்களின் மதிப்பீடு மற்றும் ஆய்வு செய்ய PLANMalaysia@Pulau Penang மூலம் மாநில அரசு செயல்படுகின்றது என்று அவர் கூறினார்.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள TLQ-க்கள், அனுமதி காலாவதியான பிறகு CLQ-களுக்கு மாற்றப்பட வேண்டும், மேலும் அதன் இறுதி தேதி டிசம்பர் 31, 2027 ஆகும்.
இதனிடையே, மலேசிய குடிவரவுத் துறையிலிருந்து பெறப்பட்ட சமீபத்திய தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பினாங்கில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 146,297 என்று மூய் லைய் தெரிவித்தார்.
“பினாங்கில் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணியமர்த்தும் ஏழு முக்கிய துறைகள் உள்ளன, அவற்றில் அதிக எண்ணிக்கையிலானவை தொழிற்சாலைகள், கட்டுமானம், சேவைகள், வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள், விவசாயம், தோட்டங்கள் மற்றும் உற்பத்தி ஆகியவை அடங்கும்,” என்று அவர் கூறினார்.