லோரோங் பாகான் லுவார் 2-ஐ ‘‘கலை வட்டாரமாக’ பிரகடனப்படுத்த பரிந்துரை – சத்திஸ்

Admin

பாகான் டாலாம் – லோரோங் பாகான் லுவார் 2 எனும் பகுதியை ‘கலை வட்டாரமாக’ பிரகடனம் செய்ய சட்டமன்றக் கூட்டத்தொடரில் முன்மொழிந்ததாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ் முனியாண்டி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் அகம் மகிழத் தெரிவித்தார்.

“கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பல்லின மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் இப்பகுதியை கலை வட்டாரமாக உருவாக்குவது அவசியம்,” என கூறினார்.

பாகான் விழா அல்லது ‘Butterworth Art Walk’ செபராங் பிறை நகராண்மைக் கழகம், தின்க் சிட்டி சென். பெர்ஹாட், சார்ட் இவன்திப் எண்டர்பிரைஸ் இணை ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஒவ்வொரு பண்டிகைகளின் கொண்டாட்டத்தை கருப்பொருளாகக் கொண்டுள்ளன, உதாராணமாக தீபாவளி, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டமாகும்.

இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினரான சத்திஸ் வரும் காலங்களிலும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு லோரோங் பாகான் லுவார் 2-ல் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார்.

இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ பொறியியலாளர் ஹாஜி ரோசாலி பின் ஹாஜி முகம்மது,

தின்க் சிட்டி  சென் பெர்ஹாட் , இயக்குநர் முரளி ராம், சார்ட் இவன்திப் எண்டர்பிரைஸ் நிர்வாக இயக்குநர் சாய்னி பின் சாய்னுல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது முறையாக கொண்டாடப்படும் இந்த விழாவில் பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியின்  தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பும் இடம்பெற்றது. இவ்விழாவில் யோகா , முறுக்கு செய்யும் வழிமுறைகள், கோலப்போட்டி,   ஆடை அலங்கார போட்டி, சிலம்பம், நடனம் என பல நிகழ்வுகள் காலை மணி 9.00 முதல் இரவு மணி 11.30 வரை சிறப்பாக நடைபெற்றன.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் ஏறக்குறைய 5,000 பல்லின மக்கள் கலந்து கொண்டு இந்திய பாரம்பரிய  உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.