வழிபாட்டு தலங்கள் அனைத்து மதத்தினரின் மத மற்றும் கலாச்சார மையமாகும்

Admin

புக்கிட் தெங்கா – வழிபாட்டு தலங்கள் இந்திய சமூகத்திற்கும் மட்டுமின்றி அனைவருக்கும் ஒரு முக்கியமான மத மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் இடமாகத் திகழ்கிறது. இது சமூகத்திடையே நல்லிணக்கத்தைப் பேணும் பிரதான தலமாகவும் அமைகிறது.

பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரும் மாநில முதல்வருமான மேதகு சாவ் கொன் இயோவ் புக்கிட் தெங்கா, ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு வருகையளித்த போது இவ்வாறு கூறினார்.

ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகவும் இந்த வட்டாரத்தில் உள்ள ஆலயங்களுக்குத் தாய் கோவிலாக விளங்குவதாகவும் அறியப்படுகிறது.

மேலும், இந்த ஆலயம் நிலப் பிரச்சனையை எதிர்நோக்குவதால் அதன் சம்பந்தமாக நில உரிமையாளர் மற்றும் ஆலய நிர்வாகம் இடையிலான கலந்துரையாடல் நடத்தப்பட்டு மாநில அரசாங்கம் நடுநிலையில் நின்று சுமூகமானத் தீர்வுக் காண துணைபுரியும் என சாவ் தெரிவித்தார்.

ஒரு பிரச்சனைக்குச் சுமூகமாக தீர்வுக் காணும் போது அது சமூகத்தில் நல்லிணத்தை மேலோங்கச் செய்ய வழிவகுக்கிறது.

தேர்தல் பிரச்சாரம் மற்றும் பரப்புரையில் கலந்து கொண்டதன் மூலம் பிறை, புக்கிட் தெங்கா மற்றும் புக்கிட் தம்புன் சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பொது மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறிய முடிந்தது என பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளருமான சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

மேலும், பத்து காவான் தொழில்துறையில் துரித வளர்ச்சி கண்டு வரும் தொகுதியாகும். எனவே, பத்து காவான் தொகுதியில் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் இங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இணக்கம் கொள்வதாக நம்பிக்கை தெரிவித்தார்.

“பினாங்கு மாநில அரசாங்கம் கடந்த 15 ஆண்டுகளாக வழிபாட்டு தலங்கள் இடிக்கக்கூடாது மாறாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையைப் பறைச்சாற்றி வருகிறது. இந்த கொள்கையைப் பின்பற்ற
சிறந்த தலைமைத்துவமே அதற்குக் காரணம்,” என எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் டேவிட் மார்ஷல் கூறினார்.

எனவே, பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளரான சாவ் கொன் இயோவ் அவர்களுக்கு வாக்களிக்க முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், பெரும்பான்மை ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என டேவிட் வலியுறுத்தினார்.

சாவ் மற்றும் ஆதரவாளர்கள் பின்னர் புக்கிட் தம்புன், தாமான் தங்லிங்கில் உள்ள இரவுச் சந்தைக்குச் சென்று மக்களைச் சந்திக்க முனைந்தனர்.