விளையாட்டு அரங்கம் மேம்படுத்த ரிம27,800 நிதி ஒதுக்கீடு – இராயர்

Admin

சுங்கை பினாங்குஅண்மையில், ஜெலுந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர் சேப்பாக் தக்ரா‘ (Sepak Takraw) விளையாட்டு மூலம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு சுங்கை பினாங்கிற்கு அருகிலுள்ள ஜாலான் சுங்கை மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் (பிபிஆர்) சேப்பாக் தக்ரா விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரிம27,800 நிதியுதவி வழங்கினார்.

இராயர் உரையாற்றுகையில் இந்த விளையாட்டு அரங்கம் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் இளைஞர்கள் சுகாதாரமான நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வலியுறுத்தப்படுகின்றனர். இந்த மேம்பாட்டுத் திட்டம் இளைஞர்கள் தீய வழிகளில் ஈடுப்படாமல் விளையாட்டுத் துறையில் கலந்து கொள்ள வழி வகுக்கின்றது, என்றார்.

இதன் மூலம் விளையாட்டுத் துறையில் குறிப்பாக சேப்பாக் தக்ரா விளையாட்டில் இலை மறை காயாக மறைந்திருக்கும் இளைஞர்களின் திறமை அடையாளம் காண முடியும். பினாங்கு மாநிலத்திற்கு பயன்தரும் சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்,” என சேப்பாக் தக்ரா விளையாட்டு அரங்கத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம், பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்களான ஷாருடின் முகமது சாரிப் மற்றும் தெங் ஜீ வேய் கலந்து கொண்டனர்.

மேலும், ஜாலான் சுங்கை பிபிகே வாகனம் நிறுத்தும் இடத்தில் சாயம் பூசுவதற்கும் சீரமைப்பணி மேற்கொள்வதற்கும் சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம் நிதியுதவி கொடுத்தார்.