பெர்தாம் – வருகின்ற அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் தேசிய நிலத்தோற்ற தினத்தை முன்னிட்டு பினாங்கில் 100,000 பாக்கு மரங்கள் நடுவதற்கு இணக்கம் கொண்டுள்ளது.
வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூவின் கூற்றுப்படி, இந்த மரக்கன்று நடுதல் பினாங்கு மாநிலத்தின் பெயரின் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியாகத் திகழ்கிறது.

“இந்தப் பெரிய அளவிலான முன்முயற்சி திட்டம் பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகியவற்றின் ஒத்துழைப்பில் செயல்படுத்தப்படும்.
“பாக்கு மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதால், அது நமது மாநிலத்தின் பெயரைப் பிரதிபலிக்காதது போல் கருதப்படுகிறது.”
“எனவே, நமது மாநில பெயரின் அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக பல்வேறு இனங்களைச் சேர்ந்த 100,000 -க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை நட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் பெர்தாம், விஷன் பார்க்கில் 2025 ஆம் ஆண்டு தேசிய நிலப்பரப்பு தினத்துடன் இணைந்து பாக்கு மரம் நடும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ படேருல் அமீன் அப்துல் ஹமிட், எம்.பி.எஸ்.பி கவுன்சில் உறுப்பினர், ஜைனுதீன் முகமது; எம்.பி.எஸ்.பி லேண்ட்ஸ்கேப் துறை இயக்குனர், ஷாக்ரோனி யூசாஃப் மற்றும் எம்.பி.எஸ்.பி ஊழியர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் தொடக்கமாக, விஷன் பூங்காவைச் சுற்றி ‘areca catechu’ எனும் அறிவியல் பெயர் கொண்ட 50 பாக்கு மரங்கள் நடப்பட்டன.
பிறை மாநில சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜூ, சாலையோரங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகள் உட்பட பல்வேறு பிரதான இடங்களில் மரங்கள் நடப்படும், என்றார்.
“நான், மேயர் மற்றும் எம்.பி.பி.பி நிலத்தோற்றத் துறையின் இயக்குநருடன் சேர்ந்து, இந்த மரங்கள் ஒவ்வொரு பொருத்தமான இடங்களில் நடப்படுவதை உறுதி செய்வோம்.
“இதில் பல்வேறு வகையான பாக்கு மரங்கள் அடங்கும், உண்ணக்கூடியவை மட்டுமல்ல, தேசிய நிலப்பரப்பு தினத்துடன் இணைந்து அலங்கார மரங்களும் அடங்கும்,” என்று அவர் விளக்கமளித்தார்.
“ஒரே நாளில் 1.2 மில்லியன் மரங்கள் நடப்பட்டதாக முந்தைய பதிவுகள் காட்டுவதால் இதனை செயல்படுத்த முடியும். எனவே, அக்டோபர் மாதத்திற்குள் 100,000 பாக்கு மரங்கள் நடும் இலக்கையும் அடைய முடியும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.