அடுத்த ஐந்தாண்டுகளில் ஊழல் அற்ற மாநகர் கழகமாக எம்.பி.எஸ்.பி உருமாற்றும் காண இலக்கு

 

புக்கிட் மெர்தாஜாம் – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) 2025- ஆம் ஆண்டுக்குள் ஊழல் அற்ற மாநகரமாக உருமாற்றம் காணும் நோக்கத்துடன் அடுத்த ஐந்தாண்டுகளில் ஊழல் தடுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

‘செபராங் பிறை மாநகர் கழக ஊழல் தடுப்புத் திட்டம் 2021-2025’ என அழைக்கப்படும் இத்திட்டம், நாட்டின் ஊழல் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த 2019 தேசிய ஊழல் தடுப்பு திட்டத்தை (என்.ஏ.சி.பி) வழிகாட்டியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் செபராங் பிறை மக்களின் கொள்கைகளும் நம்பிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ ரோசாலி மொஹமட் கூறினார்.

“இந்தத் திட்டத்தில் நான்கு பிரதான உத்திகள் மற்றும் 46 செயல்திட்டங்கள் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும்.

“பொதுத்துறை நிர்வாகத்தின் செயல்திறனை வலுப்படுத்துதல்; பொது கொள்முதலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், சட்ட அமலாக்கத்தின் நம்பகத்தன்மையை நிறுவனமயமாக்குதல் மற்றும் எம்.பி.எஸ்.பி-க்குள் நல்லாட்சியை வளர்ப்பது ஆகிய நான்கு பிரதான உத்திகள் இதில் அடங்கும்.

“ஊழல் தடுப்புத் திட்ட அமலாக்கம், எம்.பி.எஸ்.பி நிர்வாக ரீதியான ஊழல் தடுத்தல்; அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பிற வகையான லஞ்சங்களுக்கு எதிராகப் போராடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை காட்டுகிறது.

“இது எளிதில் அடையக்கூடிய ஒன்றல்ல என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும்,
கொள்கையை அடித்தளமாகக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த முடியும்.

“இந்த ஐந்து ஆண்டுகளில், மாநகர் கழகம் ஊழல் இல்லாத தளமாக எங்களால் மாற்ற முடியும் என்று நம்புகிறோம்,” என எம்.பி.எஸ்.பி கட்டிடத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் தமதுரையில் ரோசாலி இவ்வாறு கூறினார்.

எம்.பி.எஸ்.பி செயலாளர் ரோஸ்னானி மாமுட் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.