அந்நிய தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ

புக்கிட் மிஞ்யா மற்றும் ஜுருவில் அந்நிய தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படவிருக்கும் திட்டம் பினாங்கு மாநிலத்தில் அமல்படுத்துவது அவசியம் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ . புக்கிட் மிஞ்சாவில் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டு அதற்கான ஆரம்பக்கால ஆயுத்த வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அவ்வட்டாரத்தில் வாழும் குடியிருப்பாளர்கள் அந்நிய தொழிலாளர் அடுக்குமாடி குடியிருப்பால் பல இன்னல்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளப்போவதாக அஞ்சுகின்றனர். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6,000 தொழிலாளர்கள் இருக்கும் வேளையில் போக்குவரத்து வசதிக்கு 37 பேருந்துகள் மட்டுமே ஒரு நாளுக்கு இரண்டு தவணையாக செயல்படும். அதே போல, ஜுருவில் கட்டப்படவிருக்கும் அடுக்குமாடிக்கு 33 பேருந்துகள் மட்டுமே செயல்படும். எனவே, இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, பினாங்கு மாநிலத்தில் அதிகமான அந்நிய தொழிலாளர்களின் நடமாட்டத்தை குறைக்கும் நோக்கிலும் இம்மாதிரியான அடுக்குமாடி குடியிருப்பு வசதியின் வழி அவர்கள் வெளியில் நடமாடுவது குறைக்கப்படும் என மேலும் விரிவுப்படுத்தினார். மாநில அரசின் வீடமைப்புத் திட்ட கொள்கையின் மூலம் அந்நிய தொழிலாளர்கள் பொதுமக்கள் வீடமைப்பில் வசிக்க முடியாது. எனவே, இதற்கான தீர்வாகதான் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுவதாக கூறினார் திரு.ஜெக்டிப்.
இதனிடையே, அந்நிய தொழிலாளர் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுக்கு சிறுகடை, பல்நோக்கு மண்டபம், கிளினிக், உடற்பயிற்சி பகுதியில்,ஒதுக்கீடு கடை, சலவை, இணைய அறைகள், வெளிப்புற விளையாட்டு தலம் என அனைத்து வசதிகளும் அமைப்பதன் மூலம் இவர்களின் வெளிப்புற நடவடிக்கையை குறைக்கவும் மற்றும் குற்றச்செயல் எண்ணிக்கையை குறைத்து பாதுகாப்பான மாநிலத்தை உருவாக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.