சௌராஸ்தா சந்தை புதுப்பொழிவுடன் மிளிர்கிறது

புதுப்பொழிவுடன் காட்சியளிக்கும் சௌராஸ்தா சந்தை

பினாங்கில் மிகவும் பழமை வாய்ந்த சௌராஸ்தா சந்தை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் மாநில வரலாற்றுப் பெருமைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துமென்று சௌராஸ்தா சந்தையை திறந்து வைத்து உரையாற்றினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கு மாநகர் கழக ஒத்துழைப்புடன் ரிம30 லட்சம் வெள்ளி பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட இச்சந்தை வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளையும் கவரும் சிறந்த வர்த்தக தலமாக அமைவது திண்ணமென்று அவர் மேலும் குறிப்பிட்டார். இச்சந்தை மின்சார படிகளுடன் வெளிப்பரப்பில் 240 கடைகள், 81 அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், 18 உணவு கடைகள் உடன் பல்நோக்கு மண்டபமும் அடுக்குத்தள வாகனம் நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பை அளிப்பதாக மாநில முதல்வர் புகழாரம் சூட்டினார்.
இந்தச் சந்தை பல்வேறு பிரிவுகளாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதால் பொருட்களை தனித்தனியாகக் கொள்முதல் செய்ய இலகுவாகவும் கூட்டமாக குழுமி நிற்கும் அவல நிலை தவிர்க்கப்படும் என அந்நிகழ்வில் உரையாற்றிய ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.

சிறு கடைகள்

பினாங்கு மாநகர் கழக முயற்சியில் 2009 – 2016 வரை 24 பொதுச் சந்தை மற்றும் உணவகங்கள் ரிம35,434,848.66 பொருட்செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது சாலச்சிறந்ததாகும். மேலும், இவ்வாண்டு லெபோக் கெம்பல் சந்தை, ஜாலான் என்சன் சந்தை என இரண்டின் மேம்பாட்டுப் பணிக்கும் மாநில அரசு ரிம8 கோடியை ஒதுக்கியுள்ளது பாராட்டக்குரியதாகும். தற்போது, பத்து ஃபெரிங்கி சந்தை மறுசீரமைப்புப் பணி ரிம9,073,594.00 பொருட்செலவில் கட்டப்பட்டு இவ்வாண்டு திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.