ஆசியா விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்குச் சன்மானம் – மாநில முதல்வர்

ஜோர்ச்டவுன் – கடந்த 18 ஆகஸ்ட் தொடங்கி 2 செப்டம்பர் வரை பாலெம்பாங், ஜகார்த்தாவில் நடைபெற்ற 18-ஆவது ஆசியா விளையாட்டு போட்டியில் பினாங்கு மாநில போட்டியாளர்களும் நம் நாட்டை பிரதிநிதித்து களமிறங்கினர். இதனிடையே, 6 அக்டோபர் தொடங்கி 13 அக்டோபர் வரை நடைபெற்ற ‘பாரா” ஆசியா விளையாட்டு போட்டியில் பினாங்கு மாநிலத்தை சேர்ந்த விளையாட்டாளர்கள் களமிறங்கி வெற்றிவாகை சூடியுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொம் யாவ்.

பினாங்கு மாநிலத்தை பிரதிநித்து எட்டு விளையாட்டாளர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் களமிறங்கி 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். அதேவேளையில் ‘பாரா’ ஆசியா விளையாட்டு போட்டியில் பினாங்கு விளையாட்டாளர்களில் ஏழு விளையாட்டாளர்கள் 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தை அனைத்துலக ரீதியில் வென்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்ந்து உள்ளனர் என மாநில முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

எனவே, இந்த விளையாட்டு வீரர்களை வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் பினாங்கு மாநில அரசு ரிம81,200 சன்மானத்தை அனைத்து வெற்றியாளர்களுக்கும் பகிர்ந்தளித்தது. 2014-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தச் சன்மானம் வழங்கும் திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு ஊந்துசக்தியாக திகழ்வதுடன் அவர்களை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

விளையாட்டாளர்கள் இந்த வெற்றியை நல்லதொரு ஆரம்பமாக கருதி இன்னும் அனைத்துலக ரீதியில் பல வெற்றிகளை பினாங்கு மாநிலத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ, பினாங்கு விளையாட்டு சங்க தலைமை அதிகாரி பெடரிக் டான், பினாங்கு விளையாட்டு கழக பிரதிநிதிகள் மற்றும் வெற்றியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.