ஆயிர் ஈத்தாம் தொகுதியில் அறிவியல் மையம் கட்டப்படும் – முதல்வர்

ஶ்ரீ ருத்ரா வீரமுத்து மாரியம்மன் ஆலய வருடாபிஷேகத்தில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஶ்ரீ ருத்ரா வீரமுத்து மாரியம்மன் ஆலய வருடாபிஷேகத்தில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆயிர் ஈத்தாம் தொகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ருத்ரா வீரமுத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 2009-ஆம் ஆண்டு மலர்ந்த நம்பிக்கை கூட்டணி ஆட்சியைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இவ்வாலய திருவிழாவிற்கு வருகை அளிப்பதோடு மானியமும் வழங்குவார் மாநில முதல்வர் லிம் குவான் எங். இந்த ஆண்டு ரிம3,000-ஐ ஶ்ரீ ருத்ரா வீரமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கு வழங்குவதாக சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் தெரிவித்தார்.
இதனிடையே, பினாங்கு மாநில அரசு சமயம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் முழு சுதந்திரம் வழங்குகிறது என எடுத்துரைத்தார். மேலும், இந்நிலை என்றும் காக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதோடு, ஆயிர் ஈத்தாம் தொகுதியில் விரைவில் அறிவியல் மையம் கட்ட மாநில அரசு இலக்கு கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார் குவான் எங். இதன்வழி, அவ்வட்டாரத்தில் வாழும் இளைய தலைமுறையினரை அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்புடைய துறைகளில் திறன் மற்றும் ஆற்றல் கொண்ட பட்டதாரிகளாக உருவாக்க முடியும் என்றார். பினாங்கு மாநிலத்தை வளர்ச்சியடைந்த அறிவார்ந்த அனைத்துலக நகரமாக பிரகடனப்படுத்த இளையோர்களின் பங்கு இன்றியமையாதது என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வொங் ஹொன் வாய் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு. தனசேகரன் கலந்து கொண்டார்