பட்டர்வொர்த் – ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், நமது சமயம், பாரம்பரியம், கலாசாரம் மற்றும் சமூக ஒற்றுமையைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் முக்கிய மையங்களாகவும் திகழ்கின்றன என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
“எனவே, ஆலயங்களை முறையாகப் பராமரிப்பதுடன், அவற்றில் நடைபெறும் சமய நிகழ்ச்சிகள் மற்றும் சமூகப் பணிகள் தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்கப்படுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவது அவசியமாகும்.
“ஸ்ரீ மஹா வீர அனுமந்தர் ஆலயத்தின் 49ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ரிம2,500 நிதியுதவி வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற ஆலயங்களின் தேவைகளை அறிந்து, அவற்றின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து என்னால் இயன்ற ஆதரவை வழங்குவேன்,” என்றார்.
ஸ்ரீ மஹா வீர அனுமந்தர் ஆலயத்தின் 49ஆம் ஆண்டு திருவிழா அக்டோபர் 3ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, காலை 7.00 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் பஜனை நடைபெற்றதுடன், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. பக்தர்கள் பால்குடம் ஏந்தி தங்களது நேர்த்திக் கடனையும் நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 4ஆம் தேதி மாலை ஆலயத்திலிருந்து இரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா வீர அனுமந்தரின் அருளைப் பெற்றனர்
இந்நிகழ்ச்சியில், செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர் லிங்கேஸ்வரன் சர்மார் கலந்து கொண்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையராகவும், பாகான் டாலாம் மக்களின் பிரதிநிதியாகவும், இந்து ஆலயங்களின் சமய மற்றும் சமூகப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவது தமது பொறுப்பு என்றும் குமரன் தெரிவித்தார்.
“ஆலயங்களின் வளர்ச்சிக்கும், பக்தர்களின் ஆன்மிகத் தேவைகளுக்கும் தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். ஆலயங்கள் சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் முக்கிய தளங்களாக விளங்குவதால், அவற்றின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவது அவசியம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.