ஆலய பல்நோக்கு மண்டபம் நிர்மாணிக்க நிதித் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சி

Admin

பட்டர்வொர்த் – ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலய நிர்வாகத்தின் கீழ் ஏற்பாடுச் செய்யப்பட்ட  நிதித் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சியில்  நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

புக்கிட் தெங்காவில் அமைந்துள்ள 136 ஆண்டுகள் பழமையான இந்த  கோயிலில் ஆலயத் திருப்பணி மற்றும் பல்நோக்கு மண்டபம் நிர்மாணிக்க இந்த நிதித் திரட்டும் நிகழ்ச்சி ஏற்பாடுச் செய்ததாக  அதன் ஆலயத் தலைவர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

“பல்நோக்கு மண்டபத்தைக் கட்டுவதற்கு சுமார் ரிம1.5 மில்லியன் தேவைப்படுகிறது. இந்த மண்டபத்தில் 800 முதல் 1,000 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கிறோம். 

“இந்த ஆலயத்தில் இதுவரை பல்நோக்கு மண்டபம் இல்லாததால், அதைக் கட்ட இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன்.

“இந்த மண்டபம் கட்டுவதன் மூலம் மத நடவடிக்கைகள் மற்றும் பல சமூக நிகழ்ச்சிகள்  ஏற்பாடு செய்யலாம். உள்ளூர் இந்திய சமூகம் குறிப்பாக அங்குள்ள இளைஞர்கள் இதனால் பயனடையக்கூடும். 

 

“தற்போது  நாங்கள் சுமார் ரிம200,000-ஐ வசூலித்துள்ளோம்.இத்திட்டம் செயல்படுத்த  இன்றிரவு நடைபெறும் நிதித் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சி  உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் பணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளோம்.  வருகின்ற ஜூலை மாதத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவுப்பெறும்  என்று திட்டமிடப்பட்டுள்ளது,” என்று ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார். 

மேலும், முதல்வர் மேதகு  சாவ் கொன் இயோவ், இரண்டாம் துணை முதல்வர்  பேராசிரியர்  ப. இராமசாமி மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பக்தர்கள் மற்றும் பொது மக்கள்  பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு  நன்கொடை வழங்க முன்வருவோர் 012-8685400 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் அல்லது இந்து அறப்பணி வாரியத்தின் மூலம் நேரடியாக வழங்கலாம்,” என்று ஹரிகிருஷ்ணன் கூறினார்.

“2010-ஆம் ஆண்டு முதல் இந்து அறப்பணி வாரிய நிர்வாகத்தைத் தலைமையேற்று பல சமூகநலத் திட்டங்கள் வழிநடத்தப்படுகிறது. இது சமயத்தை நிர்வகிக்கும் வாரியம் மட்டுமின்றி இந்தியர்களின் கல்வி மற்றும் சமூலநலனைப் பாதுகாக்கும் அமைப்பாக விளங்குகிறது. 

“14 ஆண்டுகளாக பினாங்கு மாநில  நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியில் இதுவரை ஒரு ஆலயம் கூட உடைக்கவில்லை. இது இந்தியர்களின் நலன் பாதுகாக்கப்படுவதைப் பறைச்சாற்றுகிறது,” என்று இரண்டாம் துணை முதல்வர்  பேராசிரியர் ப. இராமசாமி தி லைட் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்தார். 

மாநில முதல்வரின்  கூற்றுப்படி, மாநில அரசு இந்து அறப்பணி மூலம் ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயத்திற்குத் தேவையான நிதியை விரைவில் வழங்கப்படும்.

“மாநில அரசு இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதியம்(RIBI) மூலம் வழிபாட்டுத் தலங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த நிதியுதவி வழங்கி வருகிறது. .

2016 முதல்  2021 ஆண்டு வரை மாநிலத்தின் RIBI நிதியின் மூலம் 207 வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் ரிம8.691 மில்லியன் நிதி வழங்கப்பட்டன. பினாங்கில் உள்ள அனைத்து இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கும் உதவ மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.

“ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் கோயில்  புக்கிட் தெங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இந்திய சமூகத்தின் முக்கியமான சமயத் தலமாகும்.

“எனவே, இந்திய சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கோவிலில் மேலும் பல மாற்றங்களைக் கொண்டு வருமாறு PHEB-ஐ கேட்டுக் கொள்கிறேன்,” என்று முதல்வர் சாவ் கூறினார்.