இந்தியாவிற்கான நேரடி விமானச் சேவை பேச்சுவார்த்தை மீண்டும் தொடர வேண்டும் – குமரேசன்

Admin

ஜார்ச்டவுன் – கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கைவிடப்பட்ட பினாங்கு – சென்னை (இந்தியா) இருவழி நேரடி விமானச் சேவை பேச்சு வார்த்தை மீண்டும் தொடரப்பட வேண்டும்.

பினாங்கு மாநில அரசு இதற்கான முயற்சியை முன்னெடுக்க முனைப்புக் காட்ட வேண்டும் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமது உரையில் இவ்வாறு வலியுறுத்தினார்.

பினாங்கு மாநில அரசு 2018-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அதன் பயனாக 2019-ஆம் ஆண்டு நேரடி விமானச் சேவைக்கான ஒப்புதலும் பெறப்பட்டது. எனினும், கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தின் காரணமாக இத்திட்டம் இடைநீக்கம் கண்டது.

தற்போது, விமான நிறுவனங்கள் தங்களின் பயணச் சேவைகளை மீட்சி பெற பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறன்கிறனர். இத்தருணத்தில் சென்னை அல்லது திருச்சியிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமானச் சேவையை பெற மாநில அரசு மீண்டும் முனைப்புக் காட்ட முன்வர வேண்டும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் குமரேசனின் கோரிக்கையை முன்வைத்தார்.

பினாங்கு மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்குப் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த நேரடி விமானச் சேவை அவசியம் எனவும் 2026-ஆம் ஆண்டு மலேசியா சுற்றுலா ஆண்டாக அறிவித்ததை முன்னிட்டு பினாங்கு சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்த இத்திட்டம் வழிவகுக்கும் என குமரேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய சுற்றுலா ஆண்டு 2026 இல் சுமார் 2.61 கோடி சுற்றுப்பயணிகள் இங்கு வருகையளிப்பர் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவுடனான இந்த நேரடி விமானச் சேவை வாயிலாக உள்ளுர் சுற்றுப்பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் பயன்பெறுவர்.

இதனிடையே, பினாங்கு – இந்தியா உடனான நேரடி விமானச் சேவையின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்குமாறு சட்டமன்றத்தில் குமரேசன் கேட்டுக் கொண்டார். மேலும், பல தரப்பினரிடம் இருந்து இது தொடர்பாக கோரிக்கைகள் நிறைய வருவதையும் அவர் கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டினர்.