இந்து அறப்பணி வாரியத்திற்குக் கூடுதல் ரிம400,000 மானியம் – முதல்வர்

பொங்கல் விழாவில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு, சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநில அளவிலான தைப்பொங்கல் கொண்டாட்டம் கடந்த 21-ஆம் திகதி பாகான் அஜாம் வட்டாரத்தில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ வீரபத்ர மஹா காளியம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்தப் பொங்கல் விழா அரசு சார இயக்கங்களுடன் சிறப்பாக இடம்பெற்றது. ஒவ்வொரு இயக்கங்களும் குழு முறையில் பொங்கல் வைத்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் 2018-ஆம் ஆண்டு முதல் இந்து அறப்பணி வாரியத்திற்கு ரிம1.5 மானியம் வழங்குவதாக அகம் மகிழ அறிவித்தார். கடந்த ஆண்டுகளில் ரிம1.1 லட்சம் வழங்கியதாகவும் இந்தக் கூடுதல் ரிம400,000 அறப்பணி வாரியத்தின் மூலம் இந்தியர்களின் நலனுக்காக அதிகமான திட்டங்கள் அல்லது பட்டறைகள் நடத்த துணைப்புரியும் என்றார்.

உலக முழுவதும் வாழும் தமிழர்கள் தை முதல் நாள் பொங்கல் தினமாக கொண்டாடுகின்றனர். இவ்விழா போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து கொண்டாடுகின்றனர். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக் கூடங்கள், தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் தைப்பொங்கலை பிரமாண்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

வரவேற்புரையாற்றிய பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் என அறிவித்தார். பினாங்கு வாழ் பெரும்பான்மை இந்தியர்கள் இந்து அறப்பணி வாரியத்திற்கு மிகுந்த ஆதரவு நல்குவதாகத் தெரிவித்தார்

பொது மக்கள் பொங்கல் விழாவில் குழு முறையில் பொங்கல் வைத்தனர்

மூன்று கரும்புகள் பிரமிட் வடிவில் கட்டப்பட்டு, அதற்கு நடுவில் விறகுகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களின் மேல் அலங்கரிக்கப்பட்ட மண் சட்டி வைக்கப்பட்டிருந்தது . ஒவ்வொரு மண்சட்டிக்கு முற்புறம் வண்ண கோலங்கள் இடப்பட்டு அவ்விடமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. மாவிலை, தோரணங்கள் கட்டப்பட்டு காளியம்மன் ஆலய வளாகம் இந்தியப் பாரம்பரியத்தை பறைச்சாற்றியது.

அதோடு, அந்நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் இந்தியர்களின் பாரம்பரிய நடனங்களான மயிலாட்டம், , பரதநாட்டியம், கோலாட்டம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றன.