இந்து ஆலயப் பராமரிப்புப் பணிக்கு நன்கொடை 

Admin

ஆயிர் ஈத்தாம் – புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் அருள்மிகு ஓம் சக்தி முனீஸ்வரர் ஆலய பக்தர்கள் சங்கத்திற்கு ரிம26,000 நன்கொடை வழங்கினார். இந்த நன்கொடை ஆலயப் பராமரிப்புப் பணி மற்றும் சமூக மண்டப மேம்பாட்டுப் பணிக்காகப் பயன்படுத்தப்படும்.

ஆலய நிர்வாகத்திற்கு வழங்கப்படும் நன்கொடையைக் கொண்டு ஆலயம் மற்றும் சமூக மண்டபத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சாயம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படும்  என ராம் கர்பால் தெரிவித்தார். 

“மறுசீரமைப்புப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த ஆலயத்திற்கு மீண்டும் வருகையளித்து அதன் சீரமைப்புப் பணிகள் குறித்து கண்காணிக்கப்படும்,” என ஆலயத் தலைவர் லோகசன் இராமையாவிடம் காசோலையை வழங்கிய பிறகு ராம் கர்பால் இவ்வாறு கூறினார்.
காசோலை வழங்கும் விழாவின் போது ராம் கர்பாலுடன் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசனும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிக்கான மொத்த செலவு ரிம670,000 என்று லோகசன் கூறினார். பினாங்கு வாழ் மக்கள் இந்த சமூக மண்டபத்தை சமூக நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.  

“அனைத்து பினாங்கு வாழ் மக்களும் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்த சமூக மண்டபத்தைப் பயன்படுத்தலாம். அதேவேளையில், சமூகநலத் திட்டங்களான பிரத்தியேக வகுப்புகள்  நடத்தவும் நாங்கள் 
குறைந்த கட்டணம் மட்டுமே விதிப்போம்.  

“அதுமட்டுமின்றி, நாங்கள் மண்டபத்தின் மற்றொரு பகுதியில் ஒரு டிஜிட்டல் நூலகத்தை அமைப்பதில் ஈடுபட்டுள்ளோம்.

“டிஜிட்டல் நூலகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நூலகத் திட்டத்தின் மூலம் குறிப்பாக  இளைஞர்கள் பயனடைவர் என நம்பிக்கை தெரிவித்தார். 

“இந்த  டிஜிட்டல் நூலகத் திட்டத்திற்காக ஐந்து மடிக்கணினிகளை வழங்குவதாக சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் உறுதியளித்தார்,” என்று லோகசன் மேலும் கூறினார்.