ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்  நவராத்திரி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது

பட்டர்வொர்த் – அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா பண்பாட்டு மற்றும் சமயக்  கூறுகளுடன் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பக்தர்களும் பொது மக்களும் வருகை அளித்திருந்த நவராத்திரி விழாவில், பினாங்கு மாநில மகளீர் மேம்பாடு, இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி சிறப்பு வருகை அளித்தனர்.

நவராத்திரி விழாவின் போது அரசாங்கத்தால்   நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை (எஸ்.ஓ.பி) கடைப்பிடித்தமைக்கு ஆட்சிக்குழு உறுப்பினர்  சோங் எங் மன நிறைவு கொண்டதோடு நன்றிப் பாராட்டினார். மேலும், பொது மக்களுக்குப் பல தளர்வுகள் வழங்கப்பட்ட போதிலும் எஸ்.ஓ.பி பின்பற்ற தவரக்கூடாது என அறிவுறுத்தினார். 


பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் இயங்கும் பட்டர்வொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் நவராத்திரி விழாக் கொண்டாட்டம் ஆலயத் தலைவர் சஞ்ஜிலாதிபன் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது.

அதே வேளையில் சிறப்பு பூஜைகளுடன், பக்தி பாடல்கள்,  பரத நாட்டியம் போன்ற முக்கிய பாரம்பரிய அம்சங்களுடன் இறுதி நாள்  நவராத்திரி கொண்டாட்டம் மிக விமரிசையாகக் காணப்பட்டது. 

ஆலயத் தலைவர் மற்றும் ஆலயத் தொண்டர் குழுவின் சிறந்த ஏற்பாட்டில் நவராத்திரி கொலுவுடன் நவராத்திரி கொண்டாட்டம் இடம்பெற்றது. பினாங்கு பிரபல ஆனந்த பவன் உணவக உரிமையாளர் டத்தோ ஹாரிகிரிஷ்ணன் அவர்களின் குடும்பத்தின் சார்பில் சிறப்பு உபயம் ஏற்று நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

PENANG HARMONY CORPORATION – HARMONICO, பினாங்கு ஹார்மனி கார்ப்பரேஷன் (ஹர்மோனிகோ) தலைவராகவும் இருக்கும் சோங் எங், ஹர்மோனிகோ நவராத்திரி திருவிழா குறித்து பொதுமக்கள் மேலும் புரிந்துகொள்ள உதவும் வகையில்  இக்கொண்டாட்டம் குறித்த  ஓர் ஆவணப்படத்தை காணொளியாக  வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சாரம் ஹார்மோனிகோவின் தொலைநோக்குக்கு ஏற்ப ஆன்மீகப் புரிதலையும் மற்றும் சமயக் கூறுகளையும் பல்லின மக்கள் வாழும்  சமுதாயத்தின் ஒற்றுமைக்கு  அடித்தளமாகத் திகழ்கிறது. இதற்குச் சான்றாக ஹார்மோனிகோவின் முகநூல் பக்கத்தில் பொதுமக்களுக்குப் பிரத்தியேகமாக நவராத்திரி காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.

பினாங்கு மாநில ஆட்சிக்குழு    உறுப்பினர் சோங் எங் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்த வேளையில், நீண்ட காலத்திற்குப் பின்பு ஆலயத்தில் நடைபெறும் சமய விழா முறையாக நடைபெற்றதில் அகம் மகிழ்வதாக கூறினர்.

ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் நவராத்திரி கொண்டாட்டத்தில் சரஸ்வதி,மகாலெச்சுமி மற்றும் துர்கையம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வழிபாடுகள் ஏற்று நடத்தப்படுகின்றது.  

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகம் மற்றும் எழுதுக்கோல் ஆகியவற்றை ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் எடுத்து வழங்கினார். அவருடன் சத்தீஸ் முனியாண்டியும் எடுத்து வழங்கினார்.

ஆலயத்தின் அனைத்து சமய நிகழ்ச்சியிலும்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ.பி பின்பற்றி இந்த தொற்றுநோய் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என  சோங் எங்  கேட்டுக்கொண்டார்.

இந்து ஆலய நிர்வாகம் சமய நிகழ்ச்சிகள் மற்றும் திருமண வைபவங்களுக்கு வருகையளிக்கும்
பொது மக்கள் எஸ்.ஓ.பி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய இயல்பில் இதனை கடைப்பிடிப்பது அவசியம், என்றார்.