இரண்டாம் கட்ட மீட்சி திட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன்-தேசிய பாதுகாப்பு மன்றம்(எம்.கே.என்) இரண்டாம் கட்ட மீட்சி திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு மாநிலத்தின் செயல்திறன் மதிப்பீட்டு அடைவுநிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும் என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பரிந்துரைத்தார்.

இன்று காலையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இரண்டாம் கட்ட மீட்சி திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்த எம்.கே.என் பிரத்தியேக அணுகுமுறையை செயல்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார். 

“ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை மற்றும் தொற்று விகிதம் மாறுப்படுகிறது. எனவே, தேசிய தொற்று விகித அடிப்படையில் செயல்படக் கூடாது. மாறாக, எம்.கே.என் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி பிரதான திட்டம் செயல்படுத்த வேண்டும். 

“இரண்டாம் கட்ட மீட்சி திட்டத்தில் கால் தடம் பதிக்கும் மாநிலங்கள் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) பின்பற்றுமாறு அறிவுறுத்துவதாக,” மாநில முதல்வர் முகநூல் நேரலை வழியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

முன்னதாக, மூத்த பாதுகாப்பு அமைச்சர், டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், மீட்சி திட்டம்  செயல்படுத்த மூன்று முதன்மை கூறுகள் அடித்தளமாக அமைகிறது, என அறிவித்தார். 

அவை தினசரி கோவிட்-19 வழக்கு சராசரி பதிவு; தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யு) படுக்கை பயன்பாடு மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற  மக்கள் தொகை விகிதம் ஆகும்.இந்த மூன்று முதன்மை கூறுகள் அதன் இலக்கை அடைந்த பின்புதான் மீட்சி திட்டம் செயல்படுத்தப்படும், என்றார். 

மேலும், தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின்  கீழ், பினாங்கு மாநிலத்தில் வருகின்ற ஜூலை மாதத்தில் 591,532 டோஸ் தடுப்பூசிகள் கட்டம் கட்டமாகச் பெறப்படும் என முதல்வர் தெரிவித்தார். 

மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தை 3 பிரதான இலக்கை அடைய வழி நடத்தி வருகிறது. அவை மக்கள்தொகையில்  10 சதவீதம் இரண்டு டோஸ் தடுப்பூசி போடுதல்; 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவில் பதிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குதல் மற்றும் பதிவு செய்து தடுப்பூசி பெற காத்திருக்கும் தரப்பினருக்கு முன்னுரிமை அளித்தல்;  60 வயது மற்றும் அதற்கு கீழ்பட்ட வயது பிரிவில் பதிவுசெய்யப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள்  போட திட்டமிடுதல்  ஆகும். 

இதற்கிடையில், மாநில அரசு கோவிட்-19 பரிசோதனை திட்டத்தை(பி.எஸ்.சி-19) வருகின்ற ஜூலை,5-ஆம் நாள் தொடங்கி பண்டாராயா அரங்கில் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். 

மாநில அரசு நிதியளிக்கும் இந்த பி.எஸ்.சி திட்டம் ‘RTK-Antigen’ முறையை பயன்படுத்தி கோவிட்-19 பரிசோதனை செய்யப்படும். 

“இத்திட்டம் சுங்கை பினாங்கு, பாடாங் கோத்தா, டத்தோ கெராமாட் மற்றும் புலாவ் தீக்குஸ் சட்டமன்ற தொகுதியில் முதலில் அமலாக்கம் காணும். பின்பு, கட்டம் கட்டமாக அட்டவணை படி பிற இடங்களிலும் நடத்தப்படும்.

“எனவே, இத்திட்டம் செயல்படுத்த ‘penangsaring.selangkah.my’ எனும் செயலியை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், பொது மக்கள் சட்டமன்ற அலுவலகத்தை நாடுவதைத் தவிர்த்து இச்செயலியின் மூலம் எளிதாக இத்திட்டத்தில் பங்கு பெற பதிவு செய்யலாம், சாவ் தெரிவித்தார்.