பட்டர்வொர்த் – மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய இந்தியர்களின் திறன் மேம்பாட்டுத் துறையான MISI 2.0 (Unit Pembangunan Kemahiran India Malaysia), மூலம் தொழிற்சாலைக்கான திறன் நிர்ணய பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, நான்கு நாள் பயிற்சியில் பங்கேற்ற 25 இந்திய இளைஞர்களுக்கு, நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.

“மனித வள அமைச்சின் மூலமாக நாடு தழுவிய நிலையில் நடைபெறும் தொழிற்திறன் பயிற்சிகள், இந்திய இளைஞர்களுக்குச் சிறு தொழில் முனைவர்களாக உருவாகவும், தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உதவுகின்றன,” என்று இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சுந்தராஜு தெரிவித்தார்.

“இந்தப் பயிற்சி பட்டறை, செயல்பாடுகளில் தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தொழில்துறை தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் தேவையான அறிவு மற்றும் நடைமுறை திறன்களுடன் தனிநபர்களை சித்தப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும், கெசுமா மற்றும் HRD Corp நிறுவனத்தின் முயற்சியைப் பாராட்டினார். இதுபோன்ற திட்டங்கள் மிகவும் திறமையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதற்கான மாநிலத்தின் குறிக்கோளுடன் ஒத்துப்போகின்றன என்றும் கூறினார்.

பிறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜு, வசதிக் குறைந்த பொது மக்கள் தொழில்முனைவோராக உருமாற்றம் காண்பதற்கு அதிகாரம் அளிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக பகிர்ந்து கொண்டார்.
“மடானி அரசாங்கம் தலைமையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய இளைஞர்களுக்காக மிகுந்த அக்கறையுடன் தொழிற்திறன் பயிற்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார். இளம் தலைமுறையினர் மிசி 2.0 வழங்கும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம்,” என மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி டிக்கம் லூர்ட்ஸ் இதனைத் தெரிவித்தார்.
இந்த பயிற்சிப் பட்டறையை என்.கே.என் அகாடமி நிர்வாக இயக்குநரும் ஒருங்கிணைப்பாளருமான கலையரசன் நடராஜன் அவர்கள் திறம்பட வழி நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகர்களாக, புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்தீவன் சிமின் சிறப்பு அதிகாரி யோகன்ராஜ், செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர் பொண்ணுதுரை,டத்தோ பாலன் நம்பியார்,அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத் தலைவர் அமரேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்தப் பயிற்சி, இளைஞர்களின் தொழில்முனைவு கனவுகளை நனவாக்கும் ஓர் அரிய வாய்ப்பாகத் திகழ்ந்ததுடன் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் சமூகத்தின் முழுமையான வளர்ச்சி சாத்தியமாகும்.