இளைஞர்களின் வளர்ச்சியை மேம்படுத்த ஆறு உயர்கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு

 

பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் (PYDC) மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பினாங்கில் உள்ள ஆறு உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.அவை  Peninsula கல்லூரி, DISTED கல்லூரி, Advanced Tertiary கல்லூரி, INTI கல்லூரி, IPK கல்லூரி மற்றும் பினாங்கு MSU கல்லூரி ஆகிய ஆறு உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெறுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றத்தை நேரில் பார்வையிட்ட மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ பேசுகையில், மாநில அரசு இளைஞர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும், என்றார்.

“2012 முதல், சமூக ஈடுபாடு, இளைஞர் வேலைவாய்ப்பு, பொதுஅறிவு பரிமாற்றம் மற்றும் பிற தொடர்புடைய இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் வழிநடத்தி  பல்வேறு வழிகளில் அவர்களை மேம்படுத்த பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் இளைஞர்களுடன் பக்கபலமாக நிற்கிறது.

“மாநில அரசு, பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் மூலம், பினாங்கு மாநிலத்தை ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும்; முற்போக்கான சமுதாயத்தை வடிவமைக்கும் முயற்சியில் உறுதிபூண்டுள்ளது,” என்று PYDC தலைவரான சூன் கூறினார்.

இன்றைய இளைஞர்கள் பொது அறிவை வளர்ப்பதற்கு வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான முயற்சியைக் கொண்டிருக்க வேண்டும், என்றார்.

“உங்கள் திறன்மிக்க கல்வியைக் கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் இது உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்தாக்கத் திறனுடன், ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து, ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றவும், சிக்கலைத் தீர்ப்பதற்கான சிறந்த தீர்வைக் கண்டறியவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

“திறன்மிக்க சிந்தனை ஆற்றல் இது உங்கள் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு உதவியாக இருக்கும். கல்வி கற்பதற்கான பயணத்திற்கு எல்லையே இல்லை.

“உலகளாவிய வரைப்படத்தில் பினாங்கு மாநில  இளைஞர்களைத் திறன்மிக்கவர்களாக நிலைநிறுத்த வேண்டும். எனவே, இளம் தலைமுறையினருக்கு தரமானக் கல்வி மற்றும் வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குவதற்கு பினாங்கில் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் முனைகின்றோம்,” என்று சூன் மேலும் விவரித்தார்.

இளைஞர்கள் தொழிற்கல்வி பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவதற்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த ஒத்துழைப்பு ஒரு கருவியாக திகழும் என்றும் மேலும் கூறினார்.

இதற்கிடையில், PYDC பொது மேலாளர் டாக்டர் க்வீ சாய் லிங் கூறுகையில், PYDC இளைஞர்களின் இணக்கத்தன்மை, திறன் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் பொருட்டு ஆறு உயர்கல்வி நிறுவனங்களுடன் அதன் குறிக்கோளையும் இலக்கையும் பகிர்ந்து கொள்கிறது, என்றார்.

“மாணவர்களின் கற்றல் கற்பித்தல் அனுபவத்தை மேம்படுத்த வேண்டும். எனவே,  சமூக ஈடுபாடு, தன்னார்வத் தொண்டு, கல்வி, இளைஞர் வேலைவாய்ப்பு, அறிவு மற்றும் திறன் பரிமாற்றம், பினாங்கு இளைஞர் நிகழ்ச்சிகள் மற்றும் பிற தொடர்புடைய ஆலோசனைகள், பேச்சு அல்லது கருத்தரங்குகள் போன்றவற்றில் நமது இளைஞர்களை வடிவமைப்பதிலும் மேம்படுத்துவதிலும் இணைந்து பணியாற்ற முடியும்,” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த இயங்கலை பட்டறையில்  ஹேமலதா முருகையா (INTI கல்லூரி பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி); பேராசிரியர் டாக்டர் விக்னேஸ்வரன் நாயர் (DISTED கல்லூரி தலைவர்); சூ சுவான் சின் (IPK கல்லூரி முதல்வர்); லிண்டா கிறிஸ்டபெல் பெலிக்ஸ் (Advance Tertiary  கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி); பேராசிரியர் டாக்டர் இயன் பாஷ்பி (தீபக்கற்ப கல்லூரி குழுத் தலைவர்); பேராசிரியர் டாக்டர் அப்துல் ஜலீல் கசாலி (MSU கல்லூரி தொழில்துறை இணைப்புகள் & தொழில்முனைவர் துணைத் தலைவர்) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.