ஜார்ச்டவுன் – அடுத்த மாதம் தைப்பூச கொண்டாட்டத்திற்கு ஏராளமானோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) அதற்கான விரிவான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பக்தர்களுக்கு மென்மையான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட தளவாட ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தற்போது காவல்துறை மற்றும் பல உள்ளூர் நிறுவனங்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு வருவதாக PHEB துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் கூறினார்.
“இரத ஊர்வலத்தின் போது ஜாலான் உத்தாமாவில் இருந்து தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம் வரை உள்ள பல்வேறு தண்ணீர் பந்தல்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
“கூட்ட நெரிசலை குறைக்க சராசரி இரதத்தை நிறுத்தும் நேரத்தை சுமார் 20 நிமிடங்களிலிருந்து சுமார் 10 நிமிடங்களாகக் குறைப்பதே எங்கள் நோக்கம்” என்று அவர் கூறினார்.
தைப்பூசத்தின் போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கேபிள் கார் கட்டுமானப் பணிகள் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள சில சாலைகளைத் தற்காலிகமாகத் திறப்பது குறித்து பினாங்கு கொடிமலைக் கழகத்துடன் (PHC) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக டாக்டர் லிங்கேஸ்வரன் மேலும் கூறினார்.
“கூடுதலாக, தண்ணீர்மலை ஆலய வளாகத்தில் நெரிசலைக் குறைக்க மற்றொரு திட்டம் எங்களிடம் உள்ளது.
“பக்தர்கள் வந்தவுடன், அவர்கள் ஆலயத்திற்க்குள் நுழைவதற்கு முன்பு அதனைச் சுற்றி நடக்க வேண்டியிருக்கும், கூட்டம் அசையாமல் இருப்பதற்குப் பதிலாக தொடர்ந்து நகர்வதை உறுதிசெய்ய இது வழிவகுக்கும்,” என்று அவர் இன்று முத்துச் செய்திகள் தொடர்பு கொண்டபோது கூறினார்.
மருத்துவ தயார்நிலை குறித்து டாக்டர் லிங்கேஸ்வரன் கூறுகையில், பக்தர்கள் மயக்கம் அடைந்தாலோ அல்லது மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடி முதலுதவி வழங்குவதற்காக, மலேசிய சாரணர் இயக்கம் (SJAM) பணியாளர்கள் உட்பட, பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, PHEB பினாங்கு சுகாதாரத் துறையுடன் (JKNPP) ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்றார்.
தைப்பூச கொண்டாட்டத்தின் முன்னதாக, அதிக கூட்ட நெரிசலைத் தவிர்க்க, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் தண்ணீர்மலை ஆலயத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
“தேவைப்படுபவர்களுக்கு PHEB போக்குவரத்து உதவியை வழங்கும்.
“இந்த ஆண்டு, சுற்றுலாப் பயணிகள் உட்பட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களை வருகையளிப்பர் என எதிர்பார்க்கிறோம். சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்த ஆண்டு தைப்பூச கொண்டாட்டத்திற்கு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகையும் கணிசமாக அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.