உத்தாமா சாலையோர வியாபாரிகளுக்குப் புதிய உணவுத் தளம்

பினாங்கு பொது மருத்துவமனையின் மூன்றாம் நுழை வாசலுக்கு அருகே உள்ள சாலையோர உணவு கடைகளுக்குத் தரமான தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காகப் பினாங்கு நகராண்மைக் கழகமும் மாநில அரசும் இணைந்து தரமேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் கடந்த அக்டோபர்  18-இல் தொடக்கி வைத்தார்.

ஜாலான் உத்தாமா வியாபாரத் தளத்தின் தரமேம்பாட்டுத் திட்டம் பினாங்கு நகராண்மைக் கழகத்தின் பத்தாவது தரமேம்பாட்டுத் திட்டமாகத் திகழ்கிறது. இதுவே,  இக்கழகம் பினாங்கு வியாபாரிகளின் மேல் காட்டும் அக்கறையைப் பிரதிபலிப்பதாக அமைகிறது. பினாங்கு வாழ் வியாபாரிகள் பினாங்கின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுபவர்கள் என மாநில அரசு அங்கீகாரம் வழங்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து, பினாங்கு வியாபாரிகளும் இன்னும் ஆக்ககரமாகச் செயல்பட்டுத் தங்கள் பொருளாதாரத்தை மட்டுமன்றி மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும் என்று முதல்வர் தம் சிறப்புரையில் கேட்டுக் கொண்டார்.

430114_199305930203503_1478647698_n

       இவ்வுணவுத் தளத்தின் மேம்பாட்டுப் பணி முதலில் ‘அ’ தளத்தையும் பிறகு ‘ஆ’ தளத்தையும் என இரு கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், முதல்வரின் கருத்துப்படி இந்த ஜாலான் உத்தாமா சாலையோர உணவு கடைகள் மிகவும் புகழ் பெற்று இருப்பதால் ரம்ஜான் நோன்புக் காலங்களில் அதிகமானோர் இங்கு வருகை மேற்கொள்கிறார்கள். எனவே, அடுத்த ஆண்டு ரம்ஜான் மாதத்திற்குள் இரு தளமும் மேம்பாடு கண்டால் வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சௌகரியமாக அமையும் என கருத்துத் தெரிவித்தார். அதன்படி பினாங்கு நகராண்மைக் கழகம் செயல்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

‘அ’ தளத்தின் தர மேம்பாட்டுப் பணிக்காகக் திறந்த ஒப்பந்தம் விடப்படிருந்தது. இப்பணியின் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கும் குத்தகை நிறுவனம் ஸ்ரீ பாடாங் மாஜு எண்டெர்பிரஸ் ஆகும். ரிம 336, 398 பொருட்செலவில் இம்மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்படும். அது போலவே, முதல்வரின் ஆலோசனைப்படி ‘ஆ’ தளத்தின் மேம்பாட்டுப் பணிக்காக  திறந்த குத்தகை விடப்பட்டு அதன் மேம்பாட்டுப் பணியும் உடனே தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாலான் உத்தாமா சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமது இஸ்மயிலின் கூற்றுப்படி இச்சாலையோரத்தில் சுமார் 50 கடைகள் உள்ளன. அவற்றில் 38 உணவு கடைகள், 7 பானக் கடைகள், 5 பொது விற்பனைக் கடைகள் உள்ளன. பல அற்புதமான வசதிகளைக் கொண்ட வியாபாரத் தளம் நிச்சயம் இங்குள்ள வியாபாரிகளுக்கு மன நிறைவை அளிக்கும் என மகிழ்ச்சி தெரிவித்தார். சூட்டைத் தணித்து நல்ல வெளிச்சத்தையளிக்கும் உயர்ந்த கூரை, சறுக்குச் சாலரம், வழவழப்புத் தன்மையற்ற உறுதியான தரை, பாதுகாப்பான மின்கம்பி அமைப்பு, உயர்தர கற்சுவர், புதிய கைக்கழுவும் இடம், சீரான குழாய், வாய்க்கால் அமைப்புப் போன்றவற்றைக் கொண்டு ஒரு பரந்த தூய்மையான, வசதியான வியாபாரத் தளம் அமையப்போவதை எண்ணி அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும், டத்தோ கிராமட் சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு ஜெகதிப் சிங் கூறுகையில், பல ஆண்டுகளாக மேம்பாடு காணாத இந்த ஜாலான் உத்தாமா சாலையோர உணவு கடைகளுக்கு இத்தர மேம்பாட்டுத் திட்டம் தங்களின் வியாபார வளர்ச்சிக்கு நல்லதொரு தொடக்கமாக அமையும் என நம்பிக்கையோடு கூறினார். மேலும், இத்தளம் அமைக்கப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புண்டா என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘இருவழிப் பாதையாக இருந்த இச்சாலை தற்பொழுது ஒரு வழிப் பாதையாகப் பயன்படுத்துப்பட்டு வருவதால் போக்குவரத்துச் சற்றுச் சீரான நிலையிலேயே இருக்கிறது’ என்று விளக்கமளித்தார்.