உரிமை,சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை நிலைநிறுத்த பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும் -சொங் எங்

“மாநில அரசாங்கம் என்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்  திட்டங்கள் நடத்துவதற்கு ஆதரவு நல்கும். மாநில அரசு பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தை (Penang Women Development Centre) கடந்த 2008-ஆம் ஆண்டு துவக்கி வைத்து பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்த பல முன்னெடுப்புத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் நடத்தப்பட்டன,” என உலக மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வ மாக தொடக்கி வைத்து மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு தெரிவித்தார்.

‘நல்வாழ்வுக்குச் சமத்துவம்’ (Balance for better) என்ற கருப்பொருளுடன் பத்து காவான் நாடாளுமன்ற சேவை மன்ற ஏற்பாட்டில் உலக மகளிர் தினம் அவ்டோ சிட்டி தளத்தில் இனிதே நடைபெற்றது.

“அண்மையில் மாநில அரசு பாலின சமத்துவக் கொள்கையை(Gender inclusiveness policy) அறிமுகப்படுத்தி இம்மாநிலத்தில் பாலின வேறுபாடு தளர்க்க வழி வகுத்தது.

வருகின்ற 2021-ஆம் ஆண்டுக்குள் கம்போங் சமூக நிர்வாகக் கழகத்தில் (MPKK)  30% பெண்கள் உறுப்பினர்களாக இடம் பெற இலக்கு கொண்டுள்ளது. எனவே, பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட அழைக்கப்படுகின்றனர். பெண்களின் உரிமை,சமத்துவம் மற்றும் முன்னேற்றத்திற்கான குரல் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் குரல் எழுப்ப அடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் இடம்பெற வேண்டும்,” என மகளிர் & குடும்ப மேம்பாடு, பாலின ஈடுபாடு, இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் வலியுறுத்தினார். 

வன்கொடுமை மற்றும் பகடிவதைக்குப் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என உற்சாகத்துடன் உரையாற்றினார் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு. வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் ‘உலக அன்பு வாரத்தை’ (National kindness week ) அனைவரும் கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில முதல்வர் துணைவியார் தான்  லின் கீ, பெராபிட் சட்டமன்ற உறுப்பினர் எங் லீ லீ மற்றும் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ் லியோங்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘சும்பா’, நடைப்போட்டி, நடனப் படைப்பு, தற்காப்பு கலை படைப்பு என பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

செய்தி :ரேவதி கோவிந்தராஜு

படம்     : அமாட் அடில் முகம்மாட்

காணொலி : நோர் சித்தி நபிலா நோரசிஸ்