உள்ளூர் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை -முதல்வர்

செபராங் பிறை நகராண்மைக் கழகத்தை சேர்ந்த 2,508 பொது ஊழியர்கள் கையொப்பமிட்ட மகஜர் மாநில முதல்வரிடம் வழங்கப்பட்டது. (உடன் நம்பிக்கை கூட்டணி அரசியல் தலைவர்கள் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள்)
செபராங் பிறை நகராண்மைக் கழகத்தை சேர்ந்த 2,508 பொது ஊழியர்கள் கையொப்பமிட்ட மகஜர் மாநில முதல்வரிடம் வழங்கப்பட்டது. (உடன் நம்பிக்கை கூட்டணி அரசியல் தலைவர்கள் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள்)

செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் பொது ஊழியர் வேலைகளுக்கு உள்ளூர் தொழிலாளர்களே வேலைக்கு நியமிக்கப்படுவர் என அண்மையில் செபராங் பிறை நகராண்மைக் கழக கிளை அலுவலகத்தில் நடைபெற்ற பொது ஊழியர்களுடன் முதல்வர் சந்திப்பு கூட்டத்தில் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கு மாநிலத்தை நம்பிக்கை கூட்டணி ஆட்சிச் செய்யும் வரை இக்கொள்கை நடப்பில் இருக்கும் என சூளுரைத்தார். பினாங்கு வாழ் மக்கள் 3D எனும் அசுத்தம், கடினம் மற்றும் ஆபத்தான வேலைகளை செய்யக்கூடியவர்கள் என தாம் நம்புவதாகக் கூறினார். செபராங் பிறை நகராண்மைக் கழக பொது ஊழியர் பணிக்கு 25,000 பேர் விண்ணப்பித்ததில் 2,508 ஊழியர்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். உள்ளூர் தொழிலாளர்களை காட்டிலும் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதில் மாநில அரசு 43% அதாவது (ரிம 20,083,423) மேலாண்மை செலவுகள் கூடுதலாக செலவிட நேரிடுகிறது. எனினும், மாநில அரசு இச்செலவு சுமையை பொருட்படுத்தாமல் உள்ளூர் பொது ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இச்சந்திப்பு கூட்டத்தின் போது செபராங் பிறை நகராண்மைக் கழகத்தை சேர்ந்த 2,508 பொது ஊழியர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களிடம் வழங்கினர். அம்மகஜரில் உள்ளூர் பொது ஊழியர்களின் பணி நியமனம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.