எட்வென்திஸ் தனியார் மருத்துவமனையில் கூடுதல் பராமரிப்பு பிரிவு திறப்பு விழாக் கண்டது

: மேதகு லிம் குவான் எங் பினாங்கு எட்வென்திஸ் தனியார் மருத்துவமனையில் கூடுதல் பராமரிப்பு பிரிவைத் திறந்து வைத்தார்.
: மேதகு லிம் குவான் எங் பினாங்கு எட்வென்திஸ் தனியார் மருத்துவமனையில் கூடுதல் பராமரிப்பு பிரிவைத் திறந்து வைத்தார்.

 

பினாங்கு மாநிலத்தில் அமைந்திருக்கும் எட்வென்திஸ் தனியார்  மருத்துவமனை 89 ஆண்டுகள் பழமையானது. இம்மருத்துவமனை நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சையளித்து பல உயிர்களை வாழ வித்துடுகிறது. இச்சேவையைத் தொடரும் வகையில் அண்மையில் கூடுதல் பராமரிப்பு பிரிவு திறப்பு விழாக் கண்டது. இவ்விழாவில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

மலேசிய பொருளாதார வளர்ச்சிக்கு சுகாதாரத்துறை ஒரு முக்கிய அம்சமாக வித்திடுகிறது. 2011-ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைப் பெரும் பொருட்டு  மலேசியாவிற்கு வந்த  550,000 சுற்றுப்பயணிகளில் 60% பினாங்கு மாநிலத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே பினாங்கு மாநிலம் சுற்றுலாத்தளம் மட்டுமின்றி மருத்துவ சுற்றுலாத்தளமாகவும் மாறி வருவது சாலச்சிறந்ததாகும்.

 

கூடுதல் பராமரிப்பு பிரிவு என்பது மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் நோயாளிகளின் நலனில் அதிகமான அக்கரை மற்றும் கவனம் செலுத்தும் பொருட்டு நிறுவப்பட்டுள்ளது. இப்பிரிவில் சிறப்பாகப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நோயாளிகளை 24 மணி நேரம் பார்த்துக் கொள்வர். மேலும், இப்பிரிவு சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு  9 படுக்கைகள் கொண்டுள்ளன. இந்த தனியார் மருத்துமனையில்

அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கூடுதல் பராமரிப்பு பிரிவானது அனைத்துலக இணை ஆணைக்குழு மற்றும் மலேசிய சமூகத் தரமான சுகாதார செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு வித்திடுகிறது என்றார் தலைமை நிர்வாகி டாக்டர் வெஸ்லி தோ.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் மலேசியாவிலேயே முதல் நிலையில் சிறப்பான மருத்துவ சேவையை வழங்குவது பினாங்கு பொது மருத்துவமனை என்பதை சுட்டிக் காட்டினார். அதோடு, பினாங்கு மாநிலத்தில் மருத்துவத்துறை அனைத்துலக நிலையில் சிறந்து விளங்க அனைத்து மருத்துவச் சார்பகங்களும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதன் வழி, சுற்றுலாத்துறையையும் மேன்மை அடையும் என்றார்.