எம்.பி.எஸ்.பி கவுண்டர் சேவைகளை UTC இல் அமைக்கப் பரிந்துரை – லிங்கேஸ்

img 20260129 wa0025

 

செபராங் பிறை – செபராங் மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) தனது கட்டண வசூல் மற்றும் கணக்கு சரிபார்ப்பு கவுன்டர்களை புறநகர் உருமாற்ற மையம் (UTC) இல் அமைக்க வேண்டும் எனும் பரிந்துரையை அதன் கவுன்சிலர் லிங்கேஸ்வரன் சர்மார் முன்வைத்துள்ளார்.

இந்த முன்முயற்சி திட்டத்தின் மூலம், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, ஒரே இடத்தில் பல்வேறு சேவைகள் வழங்கும் ‘ஒரே மைய சேவை’ (One-Stop Service) கருத்து மேலும் வலுப்பெறும் என அவர் தெரிவித்தார்.

இதன் மூலம், தற்போதுள்ள கவுண்டர்களில் ஏற்படும் நெரிசலை குறைப்பதோடு, குறிப்பாக பணியாற்றும் மக்களின் நேரத்தையும் மிச்சப்படுத்த வழிவகுக்கும்.

UTC-இல் எம்.பி.எஸ்.பி கவுண்டர்களை நிறுவினால் அங்கு இரவு 9.00 மணி வரை மக்கள் சேவைகள் பெற வழிவகுக்கும். இது பணிப்புரிபவர்களுக்கு சிறந்த வழியாக திகழும்.

மேலும், மக்கள் நட்பு மற்றும் முன்னேற்றம் கொண்ட உள்ளாட்சி அமைப்பாக எம்.பி.எஸ்.பி இன் புகழை உயர்த்தும் நடவடிக்கையாகவும் இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, பட்டர்வொர்த், UTC மையத்திற்கு வார நாட்களில் தினமும் சுமார் 500 முதல் 600 பேர் வருகையளிக்கின்றனர். பள்ளி விடுமுறை மற்றும் பொது விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை 1,000 பேர் வரை உயர்கிறது. மாதத்திற்கு சராசரியாக 20,000 வருகையாளர்கள் UTC-க்கு வருகை தருகின்றனர் என தரவுகள் சித்தரிக்கின்றது.

UTC-இல் எம்.பி.எஸ்.பி கவுண்டர் அமைப்பது, அரசின் “அருகாமையில் இருக்கும் மக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சேவை” என்ற நோக்கத்துடன் ஒத்துப்போகும் என லிங்கேஸ் தெரிவித்தார்.

பாகான் பகுதியில் இருந்த எம்.பி.எஸ்.பி தலைமையகம் மாற்றப்பட்டதன் பின்னர், குறிப்பாக வட செபராங் பிறை பகுதியைச் சேர்ந்த மக்கள் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த முன்மொழிவு ஒரு நடைமுறை மற்றும் உள்ளடக்கிய தீர்வாக அமையும்.

பொதுச் சேவை வசதிகள் மக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் கிடைக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் குறிக்கோளுக்கு இம்முயற்சி வரையறுக்கப்படும்.

எனவே, UTC நிறுவலை உறுதிசெய்ய தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் மற்றும் இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

தொடர்ந்து, எம்.பி.எஸ்.பி மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கான இணையவழி முன்பதிவு முறை அவசியம் என இரண்டாவது முன்மொழிவையும் லிங்கேஸ் இன்று முன்வைத்தார்.

இத்திட்டம் டிஜிட்டல் மாற்றத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, எம்.பி.எஸ்.பி மண்டபங்கள் மற்றும் அரங்கங்களுக்கு இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

இந்த முறை திட்டமிட்ட, வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும். பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகள் நேரில் வர வேண்டிய அவசியமின்றி முன்பதிவை மேற்கொள்ளலாம் என லிங்கேஸ் தனது கோரிக்கையை வெளிப்படுத்தினார்.

இந்த திட்டத்தின் மூலம், எம்.பி.எஸ்.பி-யில் உள்ள மண்டபங்கள் மற்றும் அரங்குகளின் பட்டியல், பதிவுப்பெறாத தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்களை நேரடி முறையில் சரிபார்க்கும் வசதி, நிகழ்ச்சிக்கேற்ற இடம் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யும் வசதி, இணையதளம் மூலம் நேரடியாக முன்பதிவு விண்ணப்பம் செய்வது, விண்ணப்ப நிலையை கண்காணிப்பது, மேலும் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கான முன்பதிவு ஆகிய விவரங்களை சுலபமாகவும் வெளிப்படை தன்மையுடனும் கையாள முடியும் என லிங்கேஸ் விளக்கமளித்தார்.

இந்த முயற்சி நேரம் மற்றும் செலவைக் குறைப்பதோடு, எம்.பி.எஸ்.பி இன் நிர்வாகத் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையையும் மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக, தொலைநோக்குப் பார்வையுடைய தலைமைத்துவம், மாநகர் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் எம்.பி.எஸ்.பி பணியாளர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம், இந்த முன்னேற்ற முயற்சிகள் அனைத்தும் செபராங் பிறை மக்களின் நலனுக்காக நிச்சயமாக நிறைவேறும் என லிங்கேஸ் மேலும் சூளுரைத்தார்.