பாகான் டாலாம் – 1928ஆம் ஆண்டு ஜாலான் பசாரில் கட்டப்பட்ட ஜெத்தி லாமா பொதுச் சந்தை, அதன் பாரம்பரிய முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில், தற்போதைய சமூகம் மற்றும் வருங்காலத் தலைமுறையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்படும்.
மேலும், கருத்து தெரிவித்த பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பாரம்பரியக் கட்டிடத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ரிம3.84 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட அசல் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் அடுத்த நவம்பர் மாதம் முதல் அதே பகுதியில் உள்ள தற்காலிக வணிக இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். இதனால் பொதுச் சந்தையின் மேம்பாட்டுப் பணிகள் திறம்பட நடைபெறும்.
இத்திட்டத்தை வோர்டெக் இன்ஜினியரிங் எனும் தனியார் மேம்பாட்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட்,1 முதல் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி உள்ளது. இத்திட்டம் 18 மாதங்களில், அதாவது ஜனவரி 31, 2027 அன்று முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங்; செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன்; பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன்; எம்.பி.எஸ்.பி பொறியியல் இயக்குநர் முகமட் சியுக்ரி சைட் மற்றும் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.