செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகத்தின் (எம்.பி.எஸ்.பி) கீழ் இயங்கும் பொதுச் சந்தைகளை பொருட்கள் வாங்கி விற்கும் இடங்களாக மட்டுமே பார்க்காமல், உள்ளூர் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ‘சமூக மையமாக’ உருமாற்றும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அதன் கவுன்சிலர் உறுப்பினர் லிங்கேஸ்வரன் சார்மர் பரிந்துரைத்தார்.
அதன்படி, ஆரம்ப கட்டமாக மூன்று பொதுச் சந்தைகளைத் தேர்வு செய்து முன்னோடித் திட்டமாக இம்முயற்சியை செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் குறித்து பொதுமக்கள், வியாபாரிகளின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மற்ற சந்தைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
“பொதுச் சந்தைகள் வெறுமனே வியாபாரம் நடைபெறும் இடங்களாக இருக்கக் கூடாது. அவை சமூகத்தை ஒன்றிணைக்கும் இடங்களாகவும், உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கும் தளங்களாகவும் அமைய வேண்டும்.
“மக்களுக்கு அழகான உள்கட்டமைப்பு மட்டுமல்ல, வாய்ப்புகளும் தேவை. சிறு வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள், இளம் தொழில்முனைவோருக்கு இடவசதி, தனித்து வாழும் பெற்றோருக்கும்
பி40 பிரிவினருக்கும் குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தேவை,” என்றார்.
வார இறுதி நாட்களில் சந்தைகளைச் சுற்றியுள்ள பொருத்தமான பகுதிகளில் சமூக நிகழ்ச்சிகள், இளைஞர் மற்றும் குடும்ப நடவடிக்கைகள், உள்ளூர் தயாரிப்புகளுக்கான விளம்பர நடவடிக்கைகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கான விற்பனைத் தளங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், குறிப்பிட்ட நேரங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வாகன நிறுத்துமிடங்களையும் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம் என அவர் பரிந்துரைத்தார்.
“வாகன நிறுத்துமிடங்களை, வாகனங்களை நிறுத்தும் இடமாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. சரியான திட்டமிடலுடன், அவற்றை அதிகமான மக்களைச் சந்தைக்கு ஈர்க்கும் நடவடிக்கைகளுக்கான தளங்களாக மாற்ற முடியும்.
“மக்களிடையே அதிக வரவேற்வு பெற்றால், முன்னதால வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதுடன், புதிய வியாபாரிகளுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதேவேளையில், உள்ளூர் தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்த முடியும்,” என்றார்.
இத்திட்டத்தை படிப்படியாகச் செயல்படுத்தி, அதன் தாக்கம், வியாபாரிகளின் கருத்துகள் மற்றும் சமூகத்தின் வரவேற்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்து, வெற்றிகரமாக இருந்தால் மற்ற பொதுச் சந்தைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
“சந்தைகள் செயலிழந்த பின்னர் அவற்றை உயிர்ப்பிக்க வழி தேடுவதற்காக காத்திருக்க வேண்டாம். வியாபாரிகள் சிரமத்தை எதிர்கொண்ட பின்னர் வாய்ப்புகளைத் தேடுவதையும் தவிர்ப்போம்.
அவரது கூற்றுப்படி, நிர்வாகத்தில் புதுமையை ஏற்படுத்துவதற்கு அவசியமாக புதிய சொத்துகள் அல்லது வசதிகளை உருவாக்க வேண்டியதில்லை. மாறாக, ஏற்கெனவே உள்ள இடங்களையும் சொத்துகளையும் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவதிலிருந்தே அது தொடங்கலாம்.
“சிறந்த நிர்வாகம் என்பது முன்னதாக உள்ளவற்றைப் பாதுகாப்பதில் மட்டும் இல்லை. மாறாக, மக்களுக்காக இன்னும் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை துணிச்சலுடன் சிந்தித்து செயல்படுவதிலும் உள்ளது,” என்றார்.
“சந்தையை உயிர்ப்பிப்போம்; வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்துவோம்; வாய்ப்புகளை உருவாக்குவோம்; மக்களின் பொருளாதாரத்தை வளர்ப்போம். சந்தை உயிர்ப்புடன் இருந்தால் சமூகம் உயிர்ப்புடன் இருக்கும்; சமூகம் வளர்ந்தால் உள்ளூர் பொருளாதாரமும் வளர்ச்சியடையும்,” என்றார்.