எம்.பி.எஸ்.பி மற்றும் எம்.பி.பி.பி பினாங்கு வாழ் மக்கள் எஸ்.ஓ.பியை பின்பற்றுவதை உறுதிப்படுத்த அமலாக்கப் பணிகளை தீவிரப்படுத்தும்

Admin

செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மற்றும் பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) கோவிட்-19 தொற்றுநோயின் பரவலை எதிர்த்துப் போராடும் முயற்சியில் அமலாக்க மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ ரோசாலி முகமட் புதிய கோவிட்-19 வழக்குகள் அதிகரித்துள்ள காரணமாக, அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை(எஸ்.ஓ.பி) மாநில மக்கள் குறிப்பாக பெருநிலத்தில் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக தனது கழகம் எட்டு புதிய செயல் திட்டங்களை உருவாக்கியுள்ளன, என்றார்.

கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முதல், எம்.பி.எஸ்.பி செபராங் பிறையில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளிலும் எஸ்.ஓ.பி இணக்கத்தைக் கண்காணிக்கும் ஊழியர்களின் வலிமையை மூன்று ஊழியர்களிலிருந்து ஆறு ஊழியர்களாக அதிகரித்துள்ளது.

“எம்.பி.எஸ்.பி மலேசிய காவல்துறை (பி.டி.ஆர்.எம்) மற்றும் மலேசிய சுகாதார அமைச்சு (எம்.ஓ.எச்) ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்”, என்றார்.

இது தவிர, எம்.பி.எஸ்.பி கம்போங் நிர்வாக செயல்முறை கழகங்ளுக்கு (எம்.பி.கே.கே) இரவுச் சந்தைகள், உழவர் சந்தைகள் மற்றும் காலை சந்தைகளை வழிநடத்துவதற்கு குறிப்பாக எஸ்.ஓ.பி-யை நடைமுறையில் பின்பற்றும் புரிந்துணர்வை அதிகரிப்பதற்காக பிரசுரங்களையும் தீவிரமாக வழங்கி வருகிறது.

“இதற்கு முன், நாங்கள் எஸ்.ஓ.பி தொடர்பான பிரசுரங்களை வழங்கியுள்ளோம், ஆனால் சில மாதங்கள் கடந்துவிட்டதால், சிலர் இந்த அமலாக்கத்தை மறந்தும் அல்லது அலட்சியமாக எடுத்துக்கொண்டிருக்கலாம்.

“எனவே, ஒரு புதிய அலை (கோவிட்-19) இருக்கும்போது, அக்டோபர் 7 ஆம் தேதி முதல் எஸ்.ஓ.பி இணக்கம் குறித்து இரவுச் சந்தை, உழவர் சந்தை மற்றும் பல அமைப்பாளர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, வருகின்ற அக்டோபர் மாதம் 18 தொடங்கி 26 வரை கொண்டாடப்படவிருக்கும் ‘The Nine Emperor Gods Festival’ கொண்டாட்டத்தில் கடுமையாக்கப்பட்ட எஸ்.ஓ.பியை பின்பற்றப்படுவது உறுதிப்படுத்தப்படும் என மேயர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இவ்விழாவின் போது அமைக்கப்படும் சிறுகடைகளில் நெரிசல் ஏற்பட்டால், அதை வர்த்தகர்கள் அல்லது ‘ரேலா’ அல்லது பிற முகவர்களை நியமிப்பதன் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

“எம்.பி.எஸ்.பி கடந்த மார்ச் 18 முதல் அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு, செபராங் பிறையில் எஸ்.ஓ.பி-யை பின்பற்ற தவறிய 23 வளாகங்களான இரவுச் சந்தை, காலை சந்தை, பொழுதுபோக்கு மையம் மற்றும் பல மூட உத்தரவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

“எஸ்.ஓ.பி-க்கு இணங்காத பார்வையாளர்கள் மற்றும் நிர்வாக உரிமையாளர்கள் மீது எம்.பி.எஸ்.பி கடுமையான நடவடிக்கை எடுக்கும், ” என்று மேயர் ரோசாலி நினைவுறுத்தினார்.

கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுபாட்டு ஆணை தொடங்கிஅக்டோபர், 6 வரை 573,632 (99.34%) கண்காணிப்பு ஆய்வுகள் 569,822 வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும்.

இருப்பினும், அதே நாளில் பிரதமரின் சமீபத்திய அறிவிப்பில், தொற்றுநோயின் அனைத்து சங்கிலிகளையும் உடைக்கும் பொருட்டு பி.கே.பியை மீண்டும் செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்று கூறினார். எனவே, அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகளை கண்டு மக்கள் ஐயூறாமல் எஸ்.ஓ.பி-களை முறையாக பின்பற்றி இச்சங்கிலியை உடைக்க அனைவரும் ஒன்றிணைந்து கடைமையாற்றுவோம் என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, எம்.பி.பி.பி மேயர், டத்தோ இயோ துன் சியாங். எஸ்.ஓ.பி.யை கடுமையாக மீறும் எந்தவொரு வளாகத்தையும் மூடுவதன் மூலம் தனது கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று முத்துச் செய்தி நாளிதழ் தொடர்பு கொண்டபோது கூறினார்.

எம்.பி.பி.பி மாநகர் கழக மேயர் இயோ துன் சியாங்

“அவர்கள் அதே தவற்றை மீண்டும் செய்தால், நாங்கள் அவர்களின் உரிமத்தை ரத்து செய்வோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

சபாவிலிருந்து திரும்பிய தனது ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், இணையவழி கூட்டங்களில் மட்டுமே பங்கேற்க அறிவுறுத்தப்பட்டதாகவும் துங் சீயாங் கூறினார்.

கடந்த அக்டோபர், 6 ஆம் தேதி வரை, எம்.பி.பி.பி 343,270 (99.66%) ஆய்வுகளை மேற்கொண்டது, அதே நேரத்தில் எஸ்.ஓ.பிக்கு இணங்காத 13 வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.