கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்காக ரிம417 மில்லியன் ஒதுக்கீடு – சாவ்

Admin

 

புக்கிட் ஜம்புல் – பினாங்கு அரசாங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தால் கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்காக ரிம417 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

புக்கிட் ஜம்புலில் உள்ள பினாங்கு கோல்ஃப் கிளப்பில் இன்று நடைபெற்ற பினாங்கு மாநில இந்தியர் சமூகநலன், கலாச்சாரம் மற்றும் சமூக சங்கம் ஏற்பாடு செய்த தொண்டு விருந்தோம்பலில் கலந்து கொண்டபோது சாவ் இவ்வாறு கூறினார்.

“இந்த உதவித்தொகையானது மாநில அரசாங்கம் பொது மக்களின் சமூகநலன் மீது கொண்ட அக்கறையைப் பிரதிபலிக்கிறது.

“இந்த ஒதுக்கீட்டில் இன, மத வேறுபாடின்றி வசதி குறைந்தவர்கள் பயனடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளாகப் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று வரும் பினாங்கு மாநில இந்தியர் சமூகநலன், கலாச்சாரம் மற்றும் சமூக சங்கத்தை, சாவ் பாராட்டினார்.

“2008 இல் நிறுவப்பட்ட இந்தச் சங்கம், வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதில் மாநில அரசாங்கத்திற்கும் உதவிக்கரம் நீட்டியதையும் நான் அறிகிறேன்.

“இதில் உணவுக் கூடைகள், கல்வி மற்றும் பிற சமூகப் பணிகளுக்கான உதவியும் அடங்கும்.

“மேலும், பினாங்கு மாநில இந்தியர் சமூகநலன், கலாச்சாரம் மற்றும் சமூக இயக்கம் போன்ற இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தொடர்ந்து சமூகத்தின் நல்வாழ்வுக்குப் பங்களிப்பது அவசியம்,” என்று அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவரான சாவ், இன்று ஆறாவது நாளாகத் தொடங்கும் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களின் ஆதரவு நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது, என்றார்.

“ஆகஸ்ட் 12-ஆம் தேதி வாக்களிக்கும் போது இந்த நம்பிக்கை நிறைவேற்றுவர், என்று நம்புகிறேன்.

“அதே நேரத்தில், மக்களைக் கையாள்வதற்கு 3R (இனம், மதம் மற்றும் அரசுக் குடும்பம்) குறித்து வதந்திகளை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகளை நிராகரிக்குமாறு பினாங்கு வாழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்,” என்றார்.

பினாங்கு வாழ் மக்கள் இந்த மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து வலுவான அதிகாரம் வழங்குவது அவசியம் என்றும் சாவ் வலியுறுத்தினார்.

ஆற்றல், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட சிறந்த அரசாங்க நிர்வாகத்தைத் தொடர்ந்து வழிநடத்துவது அவசியம்.

“நல்லாட்சி இல்லாவிட்டால், அது ஒட்டுமொத்த மக்களையும் மாநிலத்தையும் பாதிக்கும்.

“கடந்த 15 ஆண்டுகளில், பினாங்கை நிர்வகிப்பதில் PH ஏற்கனவே சிறந்த தலைமைத்துவத்தை நிரூபிக்கப்பட்ட சாதனையைப் பதிவு செய்கிறது.

“பினாங்கு மக்களிடமிருந்து மீண்டும் ஒரு வலுவான அதிகாரத்தைப் பெற்றால், அனைத்து பினாங்கு வாழ் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடர்வோம்,” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தி சின்,
பினாங்கு மாநில இந்தியர் சமூகநலன், கலாச்சாரம் மற்றும் சமூக இயக்க ஆலோசகர் மற்றும் பத்து உபான் வேட்பாளர் அ. குமரேசன், புக்கிட் தம்புன் வேட்பாளர் கோ சூன் ஐக், கெபுன் பூங்கா வேட்பாளர் லீ பூன் ஹெங் மற்றும் சங்கத் தலைவர் பாலன் நம்பியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.