கம்போங் மானிஸ் குடியிருப்பாளர்களின் வெளியேற்றத்தில் இணக்கமான தீர்வுக் காண வேண்டும் – பேராசிரியர்

 

பிறை – இரயில்வே சொத்துடைமை வாரியம்(ஆர்.ஏ.சி) மற்றும்  கம்போங் மானிஸில் உள்ள 200 குடும்பங்களின்  வெளியேற்றம் தொடர்பாக ஓர் இணக்கமான தீர்வுக் காண  வேண்டும்.

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஆர்.ஏ.சி வாரியம் இழப்பீடு அல்லது மாற்று வீடு ஒன்றினை  வழங்க வேண்டும் என்று இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர்  ப. இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

கம்போங் மானிஸ் பொது மக்களுக்கு மலிவு விலை வீடு அல்லது வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடு என்பது ஒரு பொருட்டல்ல, ஆனால் குறைந்தபட்சம் அவர்களுக்கு
இழப்பீடாக ஒரு தங்குமிடமாவது வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதோடு, அவர்களில் பலர் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

கம்போங் மானிஸ் குடியிருப்புப் பகுதி

“மேலும், இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தவும் விரைவில் இரல்வே வாரிய தரப்பினரிடம் இருந்து  முறையான சந்திப்பு இடம்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“எனது தொகுதியில் திட்டமிடப்படும் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டங்களையும் முழுமையாக ஆதரிக்கிறேன். இருப்பினும், அத்திட்டங்களில் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

“எனவே, பொது மக்கள் அனைவருக்கும் தகுதியான இழப்பீடு வழங்கப்பட்டால்  மகிழ்ச்சியடைவேன், ” என இன்று  கம்போங் மானிஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு தெரிவித்தார்.

இன்று அங்கு கூடியிருந்த குடியிருப்பாளர்களும் இருளால் சூழப்பட்ட இந்த பிரச்சனைக்குத் தீர்வுக் காணலாம் என்ற நம்பிக்கையில் காணப்பட்டனர்.

இரண்டாம் துணை முதல்வரின் கூற்றுப்படி, குடியிருப்பாளர்கள் நேற்று வெளியேற்ற செய்வதற்கான அறிவிப்பைப் பெற்றனர். மேலும் அவர்கள் ஆறு மாத காலத்திற்குள் வெளியேறும்படி ஆர்.ஏ.சியால் நோட்டீஸ் பெறப்பட்டது, என்றார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல், ஜெசன் ராஜ், கம்போங் மானிஸ் கம்போங் நிர்வாக செயல்முறை கழகத் தலைவர் ஸ்ரீ சங்கர், குடியிருப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆதரவை நல்கினர்.

“இக்குடியிருப்பாளர்களில் பெரும்பான்மையினர் சுமார் மூன்று தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு 120 இந்திய குடும்பங்களும், 80 மலாய்க்காரர் குடும்பங்களும் உள்ளனர்.

“அவர்கள் குறைந்த பட்சம்  நல்ல முறையில் நடத்தப்பட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வுக்கான வேண்டும்,” என்று மூன்று தவணையாக பிறை சட்டமன்ற உறுப்பினராக அக்குடியிருப்பாளர்களின் நலனில் கவனம் செலுத்திவரும் பேராசிரியர் ப.இராமசாமி கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, பினாங்கு மாநில அரசு இம்மாதிரியான பிரச்சனையைப் பொருத்துக்கொள்ளாது என்று கண்டணம் தெரிவித்தார்.

பினாங்கு மாநில அரசு கம்போங் புவா பாலா, கம்போங் சுங்கை கெச்சில் வெளியேற்ற பிரச்சனையிலும் தலையிட்டு அக்குடியிருப்பு மக்களுக்கு மாற்று வீடு அமைத்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.