கிரியான் தோட்டப் பாலர் பள்ளித் திறப்புவிழா

Admin

கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து பாலர் பள்ளி கட்டடத் திறப்புவிழாவைக் கோலாகலமாக வழி நடத்தினர். இவ்விழா கடந்த 3-3-2013-ஆம் நாள் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. கடந்த 28-10-2012 –ஆம் நாள் பினாங்கு மாநிலத்தின் இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி அவர்கள் இப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலக்கட்டத்திலேயே கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் விடாமுயற்சியின் பயனாக இன்று அப்பள்ளியில் மிகக் கம்பீரமாக மூன்று வகுப்பறைகளைக் கொண்ட பாலர் பள்ளி கட்டடம் காட்சியளிக்கிறது. இப்பாலர் பள்ளியில் 4 ஆசிரியர்களின் வழிக்காட்டலில் 60 மாணவர்கள் பயில்கின்றனர். இத்திறப்பு விழாவில் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் மதிப்பிற்குரிய டத்தோ மன்சோர் ஒஸ்மான்  மற்றும் இரண்டாம் துணை முதல்வர் மதிப்பிற்குரிய பேராசிரியர் ப இராமசாமி அவர்களும் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டனர். தொடக்கமாகப் பாலர் பள்ளி திறப்புவிழா பலகையில் முதலாம் முதல்வர் மதிப்பிற்குரிய டத்தோ மன்சோர் ஒஸ்மான்  மற்றும் இரண்டாம் துணை முதல்வர் மதிப்பிற்குரிய பேராசிரியர் ப இராமசாமி ஆகிய இருவரும் கையொப்பமிட்டதோடு இப்பாலர் பள்ளியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இவ்விரு தலைவர்களும் பாலர் பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்ததோடு மாணவர்களோடு கைக் குழுக்கிக் கொண்டனர்.

இரண்டாம் முதல்வர் மதிப்பிற்குரிய பேராசிரியர் ப இராமசாமி அவர்கள் தம் உரையில் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டுறவு முயற்சியைப் பாராட்டிப் பேசினார். இந்தப் பாலர் பள்ளிக் கட்டட நிதிக்காக மக்கள் கூட்டணி அரசாங்கம் ரிம 140 000 –ஐ மானியமாக வழங்கியது சாலச் சிறந்ததாகும். மேலும், சி.பி.எஸ் என்கிற அரசு சார்பற்ற இயக்கமும் இப்பாலர் பள்ளிக்குத் தளவாடப் பொருட்கள் வாங்குவதற்கு ரி.ம 16 000 வழங்கியுள்ளனர். மக்கள் கூட்டணி அரசாங்கம் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கல்வி மேன்மைக்காக உதவிக் கரம் நீட்டுவதில் மிகுந்த பெருமைக் கொள்கிறது என்றால் மிகையாகாது. மக்கள் கூட்டணி அரசாங்கம் வழங்கிய மானியத்திற்காகத் தம் மனமார்ந்த நன்றியினை அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு துரை அருளப்பன் தெரிவித்துக் கொண்டார்.

 pic3  (1)

 முதலாம் துணை முதல்வர் மதிப்பிற்குரிய டத்தோ மன்சோர் ஒஸ்மான் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் மதிப்பிற்குரிய பேராசிரியர் ப இராமசாமி ஆகியோர் பாலர் பள்ளி மாணவர்களுக்குக் கைக் குழுக்கி வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.