பினாங்கு மாநிலத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

Admin

ஒரு தலைச்சிறந்த அரசாங்கத்தை வழி நடத்திச் செல்லக்கூடிய ஒரு தலைச்சிறந்த தலைவர் என்பவர் அரசியல் பொறுப்புகளையும் ஒருமைப்பாட்டினையும் நிலைநிறுத்தக்கூடிய வல்லமை கொண்டவராகத் திகழ்பவராகும். அத்தலைவர்களில் சிலர் கட்சித்தாவலால் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளைத் துடைத்தெறிகின்றனர். கட்சித்தாவல் என்பது அளவற்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் ஓட்டுப் போட்டு நம்மை உயர்ந்த அரியாசனத்தில் அமர வைக்கும் மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகமாகும் என்றால் அது மிகையாகாது. எனவே, பினாங்கு மாநில அரசாங்கம் இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 29-8-2012-ஆம் நாள் இச்சட்டத்தை அமல்படுத்தும் முதல் அங்கமாகச் சட்டப்பூர்வ அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் உயர்திரு கர்பால் சிங் தலைமையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை கொண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  1-11-2012-ஆம் நாள் இச்சட்டத்திற்கு சட்ட மன்றத்தால் அங்கீகாராம் வழங்கப்பட்டது. 8-1-2013-ஆம் நாள் பினாங்கு மாநில ஜனாதிபதி துன் டத்தோ  உத்தாமா டாக். ஹஜி அப்துல் ரகமான் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த  15-2-2013 –ஆம் நாள் தொடங்கி இச்சட்டம் பினாங்கு மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது. இத்தகவலை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் 4-3-2013-ஆம் நாள் கொம்தார் 28-ஆம் மாடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில்  தெரிவித்தார்.

“ஓர் உறுப்பினரின் கட்சித்தாவல் தடைச் சட்டம்” , “14ஏ” என்ற புதிய பெயரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்ட அறிமுகத்தால் புதிய ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு பினாங்கு மாநில மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தையும் முதல்வர் வலியுறுத்திக் குறிப்பிட்டார். தேர்தலில் வெற்றிப் பெற்ற தலைவர்கள் அரசாங்கத்தை நன்முறையில் வழிநடத்திச் செல்லவதே அவர்களின் தலையாயக் கடமையாகும். அதனை விடுத்து கட்சித் தாவலில் ஈடுபட முற்படும் தலைவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று முதல்வர் எடுத்துரைத்தார்.

ஜனநாயக செயற்கட்சி, மக்கள் நீதிக் கட்சி, மற்றும் மலேசிய இசுலாமியக் கட்சி அடங்கிய மக்கள் கூட்டணி இந்தக் கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு அமோக வரவேற்பு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுந்த நம்பிக்கையோடு ஓட்டுப்போடும் மக்களின் நலன் கருதாமல் பணத்திற்காகவோ அல்லது மற்ற தேவைக்காகவோ அரசியல்வாதிகள் தவளைகள் போல் கட்சித் தாவலில் ஈடுப்படுகின்றனர். இச்செயலானது புதிய  சட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட்டுள்ளது சாலச் சிறந்ததாகும்.

இச்சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாகப் பினாங்கு மாநிலம் அமைவது வெள்ளிடை மலையாகும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பினாங்கு மாநிலம் என்றுமே தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.