பத்து காவான் – கிரேடெக் நிறுவனத்தின் டிஜிட்டல் நூலக உருமாற்றத் திட்டத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தில் உள்ள 10 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது இந்நிறுவனத்தின் மிகப்பெரிய கல்வி சார்ந்த முன்முயற்சி திட்டமாகத் திகழ்கிறது.
இத்திட்டத்தின் மூலம், பாரம்பரிய கல்வி இடங்களை புதுமையான கற்றல் மையங்களாக உருமாற்ற அதிநவீன டிஜிட்டல் நூலகங்களை வடிவமைக்க கிரேடெக் நிறுவனம் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குகிறது.
படைப்பாற்றல், சுய கற்றல் மற்றும் புத்தாக்கத்திறன் ஊக்குவிக்கும் டிஜிட்டல் கருவிகளுடன் மாணவர்களை மேம்படுத்துவதே இந்த முயற்சிக்கான நோக்கமாகும் என்று கிரேடெக் மனிதவளம் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜெனிஸ் லூ கை தியென் கூறினார்.
“தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், மாணவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறோம்,” என்றார்.
“கல்வி எப்போதும் முன்னேற்றத்தின் அடித்தளமாக அமைகிறது. பினாங்கு2030 இலக்கின் கீழ், தரமான கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும், நமது இளைஞர்களைப் படைப்பாற்றல், தகவல் அமைப்பு மற்றும் டிஜிட்டல் திறனுடன் உருவாக்குவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று கிரேடெக் நிறுவனத்தின் டிஜிட்டல் நூலகத் திட்டத்தை பினாங்கு முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.
“கிரேடெக் டிஜிட்டல் நூலகத் திட்டம் பினாங்கு2030 இலக்கை ஆதரிக்கிறது. பினாங்கு மாநிலத்தின் 10 அரசு தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் நவீன, தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்க கிரேடெக் நிறுவனம் உதவுகிறது. இந்நிறுவனம் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரிம2 மில்லியன் நிதியைப் பங்களிக்கிறது.
“இத்திட்டம் மின்னியல் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்தும் ஸ்மார்ட் சாதனங்கள், மின் புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை அணுக துணைபுரிகிறது.
“டிஜிட்டல் கல்வியறிவு இனி ஒரு ஆடம்பரமல்ல – அது அத்தியாவசியமாகும். பினாங்கு ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மையமாகத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டிருப்பதால், இன்றைய பணியாளர்களை மட்டுமல்ல, நாளைய மனித வளம் மற்றும் தலைவர்களையும் தயார்படுத்துவது நமது கடமையாகும்,” என முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கிரேடெக் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
டத்தோ ஸ்ரீ தான் எங் கீ; கிரேடெக்கின் தலைமை திட்ட அதிகாரி கோர் லீன் ஹெங்;
தலைமை நிதி அதிகாரி கோய் லின் லின்; மனிதவளம் மற்றும் நிர்வாக இயக்குநர்
ஜெனிஸ் லூ மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.