கோவிட்-19ஐ எதிர்கொள்ள மத்திய அரசிடம் 3 முதன்மை பரிந்துரைகள் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – நடமாட்ட கட்டுப்பாட்டின் ஆணைப் பிரப்பித்த 20-ஆவது நாளான இன்று பினாங்கு மாநில அரசு மூன்று (3) முக்கிய யுக்திகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்துள்ளன:

முதலாவதாக நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் அமலாக்கத்தை துரிதப்படுத்தவும் மற்றும் கிருமிநாசினி பணிகள் மூலம் தாக்கத்தைக் கட்டுப்படுத்துதல்; இரண்டாவது எளிய, வேகமான மற்றும் வெளிப்படையான பொது தகவல்களை பல வழிகளில் பகிர்வுதல்; மற்றும் பினாங்கு மக்கள் உதவித் திட்டம் மூலம் தாக்கத்தை நிர்வகித்தல் என இந்த மூன்று யுக்திகளை கொம்தாரில் நடைபபெற்ற முகநூல் நேரலை செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அறிவித்தார்.

இன்னும் வரும் நாட்களின் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை பின்பற்ற மாநில அரசு தயாராகி வருகிறது. பினாங்கு மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வுக்கு மாநில அரசு எப்போதும் கவனம் செலுத்தும் என மாநில முதல்வர் சாவ் உத்தரவாதம் அளித்தார்.

இன்று பினாங்கு மாநில அரசு மூன்று ஆலோசனைகளை மத்திய அரசிற்கு முன்வைத்துள்ளது.

சுகாதார அமைச்சு கோவிட்-19 பரிசோதனை முறையை மேம்படுத்துவதோடு எளிமைப்படுத்த வேண்டும். மாநில அரசு இந்த முயற்சியில் சுகாதாரத்துறைக்கு உதவ தயாராக உள்ளது. ஏனெனில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலாக்கத்தின் எஞ்சிய இந்த ஒன்பது நாட்களில் கோவிட்-19 தொற்று கண்டுள்ள நோயாளிகளை அடையாளம் காண்பதை துரிதப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

“இதனைத் தொடர்ந்து, பினாங்கு மாநிலத்தின் எல்லைகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு உள்துறை அமைச்சகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். பினாங்கில் கோவிட்-19 தொற்று பரவுவதை திறம்பட கட்டுப்படுத்த இது உதவும். மாநில குடியேற்ற அதிகாரங்களைக் கொண்ட சரவாக் மற்றும் சபா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இந்த அணுகுமுறையை பின்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது”, என மாநில முதல்வர் சாவ் விவரித்தார்.

தொடர்ந்து, அனைத்துலக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (மித்தி) மற்றும் மனிதவள அமைச்சகம் ஒன்றிணைந்து அனுமதிக்கப்பட்ட தொழில்துறை நிறுவனங்கள் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிச்செய்ய வேண்டும். அத்தியாவசிய தொழில்களுக்கான தெளிவான வழிகாட்டலும் ஆதரவும் புதுப்பிக்கப்பட்டு பொது எச்சரிக்கையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் இந்த மூன்று முக்கிய ஆலோசனைகளைத் தெளிவுப்படுத்தினார்.

ஆகவே, இந்த மூன்று முக்கிய ஆலோசனைகளை மத்திய அரசு பரிசீலிக்கும் என தாம் நம்புவதாகவும் கோவிட்-19 தேசிய பாதுகாப்பு குழுவின் சிறப்புக் கூட்டத்திற்கு இதனை சமர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாக சாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.