சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட அலுவலகம் மற்றும் கூட்டரசு முகவர்களுக்கு 200,000 முகக் கவசம் பகிர்ந்தளிக்கப்படும்- முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – மாநில அரசு கோவிட்-19 தொற்றுக் கிருமியைத் துடைத்தொழிக்கும் நோக்கில் அனைத்து சட்டமன்ற அலுவலகங்கள், மாவட்ட அலுவலகங்கள் மற்றும் கோவிட்19-ஐ எதிர்நோக்க போராடும் கூட்டரசு முகவர்களின் முன்வரிசை பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து 200,000 முகக் கவசம் பகிர்ந்தளிக்கப்படும்.

மாநில அரசு முன்னதாக அறிவித்த 6 மில்லியன் முகக் கவசம் அழிப்பானை தொடர்ந்து தற்போது அதன் விநியோகம் கட்ட கட்டமாகப் பெறப்படுகிறது.

மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கூறுகையில் முகக் கவசம் கட்ட கட்டமாகப் பெறப்படும் என்றும் இந்த வாரம் 200,000 முகக் கவசம் பெறப்பட்டன ; அடுத்த வாரம் இரண்டாம் கட்ட விநியோகம் கிடைக்கப்பெறும் என்றார்.

“அடுத்த வாரம் பெறப்படும் முகக் கவசம் முன் வரிசை பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கி பகிர்ந்தளிக்கப்படும். இது மாநிலத்தின் கடமையாகக் கருதப்படுகிறது,”என இரண்டாம் கட்ட நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணைக் குறித்த முகநூல் நேரலையில் முதல்வர் இவ்வாறு கூறினார்.

“மாநில அரசு முகம் பாதுகாப்பான் (face shield) தயாரிக்க ரிம60,000 கூடுதல் நிதி ஒதுக்கி அதனை அனைத்து மாநில அரசு மருத்துவமனை மற்றும் கிளினிக்களுக்கு வழங்க இணக்கம் தெரிவித்தள்ளது.

பினாங்கை சேர்ந்த இளம் பொறியியலாளரான லூயிஸ் ஊய் மற்றும் குழுவினர் நமது மருத்துவக் குழுவினர் பயன்படுத்தும் இந்த முகம் பாதுகாப்பானைத் தயாரித்தனர். இந்த முகம் பாதுகாப்பான் பினாங்கு மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றது. இது பாதுகாப்பானது, பயன்படுத்த வசதியானது, மலிவானது மற்றும் உற்பத்தி செய்வது எளிது,” என முதல்வர் தெரிவித்தார்.
மேலும், இந்த கோவிட்-19ஐ எதிர்நோக்கும் சூழலில் அனைவரின் பங்களிப்பு மற்றும் ஆதரவு அவர்களின் மனிதாபிமான உணர்வை மேலோங்கச் செய்கிறது என பாராட்டினார்.

இன்று பினாங்கு மாநில சீன தூதரகர் லு ஷிவேய்; எக்ஸ்.எஸ்.டி இன்டர்நேஷனல் பேப்பர் நிறுவனம் மற்றும் புஜியான் மாகாணத்தின் குவாங்காங் மாவட்ட அரசாங்கம் ஆகியோரிடம் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டன.

” சீன தூதரகத்திலிருந்து 15,000 அறுவை சிகிச்சை முகம் பாதுகாப்பான், 50,000 முகக் கவசம் (எக்ஸ்.எஸ்.டி இன்டர்நேஷனல் பேப்பர் நிறுவனம் ) மற்றும் 6,400 அறுவை சிகிச்சை முகம் பாதுகாப்பான், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் 100 ஜோடி மருத்துவ உடைகள் மற்றும் 100 ஜோடி கால் பாதுகாப்பு ஆவணங்கள் (குவாங்காங் மாவட்ட அரசு) ஆகியவை இதில் அடங்கும்” என குறிப்பிட்டார்.

செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் மாநில சுகாதாரத் துறையின் துணை மருத்துவ இயக்குநர் (மருந்தகம்) ஜுபைடா சே ‘எம்பீ மற்றும் ஷெர்லி லிம் (மருந்தியல் அதிகாரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.