சமூக நீதிக்கான அரண் – மலேசியத் தமிழர் குரல்!

Admin

ஜார்ச்டவுன் – மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைமையகம் தாமான் இண்ராவாசி பகுதியில் நான்கு மாடிக் கட்டடத்தில் இன்று ‘விஸ்மா மலேசிய தமிழர் குரல்’ என கம்பீரத்துடன் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாக் கண்டது.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த நான்கு மாடிக் கட்டிடத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து
இந்தக் கட்டிடத்தை வாங்க முயற்சித்த டேவிட் மார்ஷல் மற்றும் அவர்தம் குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

“பினாங்கு மாநில அரசாங்கம், மக்கள் நலன் சார்ந்த செயல்திட்டங்களை ஒன்றிணைந்து செயல்படுத்த முதுகெலும்பாகத் திகழும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) திட்டங்களுக்கு எப்பொழுதும் ஆதரவு அளிக்கும்.

“இந்தப் புதிய தலைமையக செயல்பாடு, சமூகச் சேவையை அடிப்படையாகக் கொண்டு பல ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் வழிநடத்த வேண்டும்,” என முதல்வர் கேட்டுக் கொண்டார்.

“2014-ஆம் ஆண்டு புலனம் வாயிலாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது தேசிய ரீதியில் ஒரு பதிவுப்பெற்ற இயக்கமாக மாறி, இன்று ஓர் அறவாரியமாக உருமாற்றம் கண்டுள்ளது. இந்திய சமூகத்தின் அடிப்படை உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இயக்கமாக மட்டுமின்றி கல்வி, சமூகநலன் என அனைத்து வளர்ச்சிக்கும் பிரதான இயக்கமாகத் திகழ்கிறது.

“2016-ஆண்டு மலேசிய தமிழர் குரல் இயக்கம் அதிகாரப்பூர்வமாக அரசு சாரா இயக்கமாகப் பதிவு செய்யபட்டது. இந்த இயக்கத்தில் நாடு முழுவதும் 1,000 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர்.

“தொடக்கத்தில், இந்த இயக்கத்திற்கானத் தலைமையகம் அமைக்க இந்த கட்டிடம் குறைந்த விலைக்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. பின்னர், ஓர் வருடத்தில் சமூகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், நல்லுள்ளங்கள் உதவியுடன் ரிம580,000 நிதித் திரட்டி இன்று இந்தியர்களின் அடையாளமாக இந்த நான்கு கட்டிடம் திகழ்வதாக,” பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி உரையாற்றினார்.

“இந்த இயக்கத்தின் கீழ் அடிப்படை உரிமைகளுக்குக் குரல் கொடுக்கப்படுகிறது. அதேவேளையில், அண்மையில் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டது. மேலும், பஹாங், சிலாங்கூர் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவ ரிம250,000 நிதித் திரட்டி உதவிகள் நல்கப்பட்டது.

“அடுத்து இந்த இயக்கத்தின் கீழ் அறவாரியம் அமைத்து வசதிக் குறைந்த இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஊக்கத்தொகை வழங்கவும் உத்தேசிப்பதாக,” மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தேசியத் தலைவர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் அவர்கள், இந்த இயக்கம் மனித உரிமைப் பிரச்சினையைத் தவிர வேறு பல பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும். எனவே, அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்கள், பொருளாதார நெருக்கடி, அடிப்படை பொருட்களின் விலையேற்றம் குறித்த பிரச்சனைகளிலும் குரல் கொடுக்க முன் வர வேண்டும் என வலியுறுத்தினார்.

டேவிட் மார்ஷல், செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் உறுப்பினராகவும் மலேசிய தமிழர் குரல் தேசியத் தலைவராகவும் அவரது கடமைகளைச் செவ்வனே ஆற்றும் சிறந்த தலைவர் என மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி புகழாரம் சூட்டினார்.

மேலும், இந்த இயக்கத்தின் கீழ் டிஜிட்டல் நூலகம் அமைப்பது குறித்து உத்தேசிக்குமாறு பேராசிரியர் கேட்டுக்கொண்டார். இந்த இயக்கம் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதோடு, மக்களின் சமூகநலன் பாதுகாக்கவும் முன்னுரிமை அளிக்க வேண்டும், என்றார்.