சிறு நடுத்தர வணிகங்களுக்கான PEKA கடனுதவித் திட்டம், ரிம30 மில்லியன் நிதி ஒதுக்கீடு – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – மாநில அரசாங்கம் பினாங்கில் உள்ள மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (பி.கே.எஸ்) உதவுவதற்கு பினாங்கு மாநில நேரடி வணிகக் கடனுதவித் திட்டம் அல்லது சிறு நடுத்தர வணிகங்களுக்கான PEKA திட்டம் அறிவித்தது.

“கோவிட் -19 வைரஸ் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (பி.கே.எஸ்) தொழில் முனைவர்கள் தங்களின் வியாபாரத்தை மீண்டும் புத்துயிர் வழங்க இந்த கடனுதவித் திட்டம் துணைப்புரியும்,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இன்று நடைபெற்ற முகநூல் நேரலையில் தெரிவித்தார்.
மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்த ரிம30 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. தொழில் முனைவர்கள் சிறு நடுத்தர வணிகங்களுக்கான PEKA கடனுதவிப் பெற வருகின்ற ஏப்ரல் 8 முதல் 21-ஆம் நாள் வரை www.pdc.gov.my எனும் இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பி.கே.எஸ் தொழில்துறை இம்மாநிலத்தின் வியாபார கூட்டாளராகவும் பொருளாதார மேம்பாட்டின் உந்துசக்தியாகவும் திகழ்கிறது. மேலும், இத்துறை வேலை வாய்ப்புகள், உற்பத்தித் திறன் மற்றும் புத்தாக்கத்தை அதிகரிப்பதன் மூலம், மக்கள் மற்றும் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

PEKA கடனுதவித் திட்டத்தின் மூலம் உற்பத்தி தொழில் துறை சார்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (பி.கே.எஸ்) ரிம50,000 கடனுதவியும் பிற துறையைச் சார்ந்த மைக்ரோ தொழில் முனைவர்களுக்கு ரிம20,000 வரை கடனுதவியும் பெற விண்ணப்பிக்கலாம்.

தொழில் முனைவர்களுக்காக இந்த பிரத்தியேக வட்டியற்ற கடனுதவித் திட்டம் வழங்கப்படுகிறது. இந்த கடனுதவி மீண்டும் செலுத்தும் வழிமுறைகள் பின்வருமாறு:-

அ. முதல் ஆறு மாதங்களுக்கு கடன் பெறுநர் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.

ஆ. கடன்பெறுநர் 7-வது மாதம் தொடங்கி 30-வது மாதத்திற்குள் கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டும்.

இ. ஊக்கத்தொகையாக, கடன் பெறுநர் 18 மாதத்திற்குள் அல்லது முன்னதாக கடனைத் திரும்பிச் செலுத்தினால் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும்.

ஈ. 30 மாதங்களுக்குள் கடனைச் செலுத்தத் தவறினால், 8 விழுக்காடு தாமதமாக செலுத்தும் அபராதம் விதிக்கப்படும்.

PEKA கடனுதவித் திட்டம் மாநில அரசாங்கம் மைக்ரோ மற்றும் பி.கே.எஸ் தொழில் முனைவர்கள் மீது கொண்ட கடப்பாட்டைச் சித்தரிக்கின்றது. மேலும் பிரதமர் அறிவித்த பி.கே.எஸ் கருணை உதவித் திட்டத்தின் கீழ் தொழில் முனைவர்கள் விண்ணப்பிக்குமாறுக் கேட்டுக்கொண்டார்.

“மாநில அரசு சிரமமான சூழலில் பினாங்கு வாழ் மக்களை ஒரு போதும் கை விடாது. கடினமான சூழலை ஒன்றிணைந்து எதிர்நோக்குவோம், மகிச்சியான தருணத்தை ஒன்றாக அனுபவிப்போம்,” என வலியுறுத்தினார்.
தொழில் முனைவர்கள் வருகின்ற ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மேல் விபரங்களுக்கு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தை (பி.டி.சி) 04-6340234/335/323/870/137 ஆகிய எண்களில் காலை மணி 9.00 முதல் மாலை மணி 5.00 வரை தொடர்புக் கொள்ளலாம் (சனி & ஞாயிறு விடுமுறை)>