ஜார்ச்டவுன் – உலகளாவிய சவால்கள், குறிப்பாக வெள்ளம், வறட்சி மற்றும் கடல்சார்ந்த சுற்றுச்சூழல் அழுத்தங்களை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், பினாங்கு மீள்தன்மையுடன் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் வலியுறுத்தினார்.
“நாம் சுறுசுறுப்பாக மற்றும் மீள்தன்மை கொண்ட ஒரு மாநிலத்தை உருவாக்க வேண்டும்.
“சிலிக்கான் தீவு, பிற உயர் தாக்கத் திட்டங்களுடன் இணைந்து, பசுமை மற்றும் எதிர்காலத்திற்கு முன்னோக்கிச் செல்லும் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஊந்துகோலாகச் செயல்படும்,” என்று அவர் மாநில சட்டமன்றக் கட்டிடத்தில் பினாங்கு மாநில 2026 வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும் போது இவ்வாறு கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் பினாங்கு இயற்கை அடிப்படையிலான பருவநிலை தகவல் அமைப்புத் திட்டம் (PNBCAP), நகர்ப்புற விவசாயம் மற்றும் பெரிய அளவிலான மரம் நடுதல் ஆகியவை உள்ளடங்கும்.
இந்த முன்முயற்சிகள்,
புத்தாக்க உள்கட்டமைப்பு திட்டங்களால் அமைக்கப்படும்
சிலிக்கான் தீவு போன்ற
நிலையான தொழில்துறை மற்றும் நவீன வாழ்க்கைக்கான மையமாக விளங்கும் இத்தலத்தில் பூர்த்திச் செய்யப்படுகின்றன.
மாநில அரசு, PLANMalaysia Penang மூலம், நகர்ப்புற மற்றும் புறநகர் திட்டமிடல் முயற்சிகளைத் தொடர்ந்து வழிநடத்துகிறது.
“2025 ஜூலை நிலவரப்படி, நிர்வகிக்கப்பட்ட தொழில்துறை பூங்கா (MIP) மற்றும் மைக்ரோமொபிலிட்டி வாகன வழித்தடங்கள் உட்பட எட்டு புதிய திட்டமிடல் வழிகாட்டுதல்களை மாநில திட்டமிடல் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
“அதே நேரத்தில், பினாங்கு கட்டமைப்புத் திட்டம் 2040 (RSNPP2040) உட்பட முக்கிய திட்டமிடல் ஆவணங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இது தேசிய கொள்கைகளுடன் ஒத்துப்போகும் மற்றும் பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சிலிக்கான் தீவு போன்ற உயர் தாக்க திட்டங்களை ஒருங்கிணைக்கிறது,” என்று சாவ் மேலும் கூறினார்.
மேலும், சிலிக்கான் தீவு சீராக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“2,300 ஏக்கர் பரப்பளவில், 2023 செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மீட்புப் பணிகள், 2025 அக்டோபர் மாதத்திற்குள் 250 ஏக்கர் நிலத்தை பணிநிறைவு செய்துள்ளன.
“மீட்டெடுக்கப்பட்ட நிலம் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த தயாராகி வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக 1,260 ஏக்கர் பரப்பளவில் கட்டம் 1 நிறைவுக்காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள முக்கியமான தளங்களில் எல்.ஆர்.டி டெப்போ , 16.74 ஏக்கர் இண்டா வாட்டர் கன்சோர்த்தியம் நிலையம் மற்றும் 100 ஏக்கர் பசுமை தொழில்நுட்ப பூங்காவின் ஒரு பகுதி ஆகியவை அடங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், சாவ் தனது உரையில், வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள், ஒரு மசூதி, HOTI வளாகம் மற்றும் மாநில அரசாங்கத்தின் நிர்வாக மையம் போன்ற மூலோபாய தளங்கள் 2026 மற்றும் 2030 க்கு இடையில் நிறைவடையும் என்றும் குறிப்பிட்டார்.
“உள்கட்டமைப்புப் பணிகளும் முன்னேறி வருகின்றன, தெற்கு பினாங்கை சிலிக்கான் தீவுடன் இணைக்கும் தற்காலிக பாலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
“ரிம389 மில்லியன் செலவில் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள நிரந்தர Pan Island இணைப்பு 2A (PIL 2A) கட்டம் 1 இன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
“சிலிக்கான் தீவு வெறும் நில மீட்பு மட்டுமல்ல. புதுமை, நிலைத்தன்மை மற்றும் சமூக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதோடு, உலகளாவிய சவால்களை தாங்கக்கூடிய நெகிழ்ச்சியான நகரத்தை உருவாக்கும் பினாங்கின் உறுதியையும் இது பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.
பருவநிலை மாற்றம், மூலோபாய திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு புத்தாக்கம் முன்னணியில் இருப்பதால், பினாங்கு 2030 தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஒரு மீள் நகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.