செண்டிலேன் குடியிருப்பு மக்களுக்குப் புதிய அடுக்குமாடி வீடுகள் கட்ட முன்மொழிவு.

Admin

பினாங்கு மாநில அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல அரிய திட்டங்களைத் தீட்டி வருகின்றது. அவ்வகையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் மும்முரம் காட்டி வருகிறது எனலாம். அதன் நோக்கில் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுள்ளது. இத்திட்டத்தை இரண்டு கட்டமாக மேற்கொள்ள அரசு ஆயத்தப் பணியில் ஈடுபட்டுவருகிறது.

முதற்கட்டம், மக்கள் குடியிருப்பற்ற காலியான நிலங்களில் வீடமைப்புப் பணிகளை மேற்கொள்வதாகும். இரண்டாவது கட்டம் மக்கள் குடியிருக்கும் நிலங்களில் அவர்கள் சம்மதத்தோடு வீடமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகும். இரண்டாவது கட்டப் பணிக்கான வேலைகள் அதிகம் என்பதால் இத்திட்டம் தாமதப்படும். அந்த வகையில் ஜாலான் சி.வாய் சோயில் அமைந்துள்ள சென்டிலேன் கடற்கரையோரக் குடியிருப்புப் பகுதியினை மேம்படுத்தும் திட்டத்தையொட்டி அக்குடியிருப்பு மக்களை நேரடியாகச் சந்தித்துக் கருத்துப் பெறவும் அப்பகுதியைப் பார்வையிடவும் பினாங்கு முதல்வர் உயர்திரு லிம் குவான் எங்கும் சட்டமன்ற உறுப்பினர் திரு.சாவ் கொன் யாவும் இங்கு வருகை மேற்கொண்டனர்.

முதல்வர் அவர்கள் அக்குடியிருப்பு மக்களில் ஒருவரான திருமதி லோவுடன் கலந்துரையாடி அவர்கள் வாழும் சூழ்நிலையை அறிந்து கொண்டார். அக்குடியிருப்புப் பகுதி குறுகிய நிலையில் இருப்பதால் வாய்க்கால் மற்றும் வடிகால் திட்டத்தை மேற்கொள்வது கடினம். ஆகவே, அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வண்ணம் அவர்களின் முழு சம்மதத்துடன் அங்கு மாற்று வீடுகள் கட்டும் திட்டத்தை அரசு மேற்கொள்ளும் என முதல்வர் அறிவித்தார்.

சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அப்பகுதியில் இனியும் எந்தவொரு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தால் இனிவரும் காலங்களிலும் அதே நிலையிலேயே பின்தங்கியிருக்கும் என சட்டமன்ற உறுப்பினர் சாவ் வருத்தம் தெரிவித்தார். ஏறக்குறைய 4.47 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அக்குடியிருப்புப் பகுதியில் 27 உரிமம் கொண்ட வீடுகளும் 32 உரிமமற்ற வீடுகளும் உள்ளன. மேலும், சீனர்களின் வழிப்பாட்டுத் தளமான கோவில்கள் 3 உள்ளன. அவற்றைத் தவிர 1 உரிமம் கொண்ட கடையும் 13 உரிமமற்ற கடைகளும் அங்கு உள்ளன. மாவட்ட அலுவலகம் இக்குடியிருப்பு மக்களின் முழுமையான கணக்கெடுப்பை எடுக்க பணிக்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு மக்களின் வெளிப்பாடான கருத்தையும்  விருப்பத்தையும் அறிய வழிவகுக்கும். மக்களின் முன்னுரிமையை முன்னிறுத்தியே இத்திட்டம் மேற்கொள்ளப்படும். அநேகமாக, அங்கு அடுக்குமாடி வீடுகளே கட்டப்படும் சாத்தியம் உள்ளது எனச் சட்டமன்ற உறுப்பினர் சாவ் வலியுறுத்தினார்.

தங்களுக்கு மாற்றுவீடுகள் கிடைப்பதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக திருமதி லோ அவர்கள் கூறினார். இந்த மேம்பாட்டுத் திட்டதின்வழி சுற்றுச் சூழல் மாற்றம் காண்பதோடு அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என நம்பிக்கை தெரிவித்தார்.