செபராங் ஜெயா, பொது நீச்சல் குள வளாக மேம்பாட்டுத் திட்டம் ஏப்ரலில் தொடங்கும்

ஜார்ச்டவுன் – செபராங் ஜெயா, பொது நீச்சல் குள வளாகத்தை மேம்படுத்தும் பணி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும். இத்திட்டம் எட்டு முதல் 12 மாதங்களில் நிறைவுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், இத்திட்ட மேம்பாட்டு நிறுவனமான டி சுவிம் அகாடமி சென் பெர்ஹாட்(Syarikat D Swim Academy Sdn Bhd) இந்தப் பொது வசதிகளை மேம்படுத்தும் பணிக்கான செலவினை(ரிம 3மில்லியன்) முழுமையாக நிதியளிக்கும்.

“இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் கூரை கட்டுதல், புதிய ‘பம்ப்’ நிறுவுதல், சுராவ் மற்றும் கழிப்பறைகள் போன்ற தற்போதைய வசதிகளை மேம்படுத்தல்; நுழைவுக் கட்டண கவுண்டர்கள், சிற்றுண்டிச்சாலைகள், விளையாட்டு உபகரணக் கடைகள் நிர்மாணித்தல் ஆகியவை அடங்கும்.

“இந்த வளாகத்தை மேம்படுத்தல், நிர்வகித்தல் மற்றும் பராமரிப்பதற்கான திட்டம் ‘புதுச் செயல் திட்டத்திற்கான வேண்டுகோள்'(RFP) மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இது மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தவில்லை,” என்று நீச்சல் குள வளாக
குத்தகை ஒப்பந்தம் மற்றும் துணை குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி), பினாங்கு விளையாட்டு அரங்கம் மற்றும் பொழுது போக்கு வாரியம் மற்றும் டி சுவிம் அகாடமி சென் பெர்ஹாட் ஆகிய மூன்று தரப்பினர் இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

“இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்நில உரிமையாளரான எம்.பி.எஸ்.பி, பினாங்கு விளையாட்டு அரங்கம் மற்றும் பொழுது போக்கு வாரியத்திற்குக் குத்தகைக்குக் கொடுத்து, அது தொடர்பான நீச்சல் வளாகத்தை நிர்ணயிக்கப்பட்ட தரசெயல்பாடு வழி தொடர்ந்து நிர்வகிக்கவும் இயக்கவும் அனுமதி கொடுக்கப்படுகிறது.

“அடுத்து, பினாங்கு விளையாட்டு அரங்கம் மற்றும் பொழுது போக்கு வாரியம் இந்த நீச்சல் குள வளாகத்தை மேம்படுத்தும் பொருட்டு டி சுவிம் அகாடமி சென் பெர்ஹாட் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்கும்,” என்று விளக்கமளித்தார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் பினாங்கு மாநில விளையாட்டுத் துறையை மேம்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, சிறந்த நீச்சல் வீரர்களை உருவாக்கவும் துணைபுரியும், என்றார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் டி சுவிம் அகாடமி சென் பெர்ஹாட் நிறுவனம் வருகின்ற 18 ஆண்டுகளுக்கு இத்தலத்தை நிர்வகிக்கும், என ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ தெரிவித்தார்.

“இந்த மேம்பாட்டுத் திட்டம் நிறைவுக்கண்டப்பின், அதன் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்படாது, மாறாக இந்நிறுவனம் எவ்வித கட்டண உயர்வை அறிமுகப்படுத்தும் முன் எம்.பி.எஸ்.பி மற்றும் பினாங்கு விளையாட்டு அரங்கம் மற்றும் பொழுது போக்கு வாரிய அனுமதி பெற வேண்டும், என்றார்.