ஜார்ச்டவுன் – சுங்கை பினாங்கு ஆற்றுப் பகுதியின் சோலோக் வான் பிராக் வெள்ள நிவாரணத் திட்டம் தற்போது 90% நிறைவடைந்துள்ளதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டம் சிறப்பாக மேம்பாடுக் கண்டு வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சாவ் கூறினார்.

“சுங்கை பினாங்கில் வெள்ளத் நிவாரணத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, விரைவில் அது நிறைவடையும் என்று நம்புகிறோம். சோலோக் வான் பிராக் திட்டம் 90% நிறைவடைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, இத்திட்டத் தரவுகளின் அடிப்படையில் நீர் தேக்கக் குளம் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன, தற்போது உள்ளே செல்லும் மற்றும் வெளியேறும் அமைப்புகள் மட்டுமே முழுமைப்பெறவில்லை, என்றார்.
சோலோக் வான் பிராக் திட்டத்தை மாநில வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையின் கீழ் ரிம5.71 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

பத்து லாஞ்சாங் மற்றும் ஜாலான் மஸ்ஜித் நெகேரியில் வெள்ள நிவாரணத் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் சாவ் குறிப்பிட்டார்.
பினாங்கின் முன்னேற்றத்தைப் பற்றி பேசிய சாவ், 2008 முதல் மாநிலத்தின் வளர்ச்சி நிலையானதாகவும் மக்களை மையமாகக் கொண்டு செயல்படுவதாகவும் கூறினார்.
“2008 முதல் வழங்கப்பட்ட ஆணையை அடிப்படையாகக் கொண்டு, மாநில வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, மக்கள் நலனுக்குப் பயனளிக்கும் வகையில் செயல்பட உறுதிபூண்டுள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற தீபாவளிப் பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில முதலமைச்சர் சாவ் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், வசதிக் குறைந்த சுமார் 210 குடும்பங்களுக்கு தீபாவளிப் பரிசுக்கூடைகள் விநியோகிக்கப்பட்டன. மேலும், ஜெலுத்தோங் நாடாளுமன்றப் பகுதியின் கீழ் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 70 பரிசுக்கூடைகள் என பகிர்ந்து வழங்கப்பட்டன.
இதற்கிடையில், தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பி40 குழுவைச் சேர்ந்த குடும்பங்களை மறந்துவிடக் கூடாது. இந்த உதவி அவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் சுட்டிக்காட்டினார்.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் அறிவிக்கப்பட்ட 50% டோல் கட்டணக் குறைப்பையும் இராயர் வரவேற்றார், இது பண்டிகைக் காலத்திற்காகப் பயணிப்பவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஆயிர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங், பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் ஆ தியோங், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) மேயர் டத்தோ இராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.