மாநில அரசு மேஜர் கயாம்பு குடும்பத்திற்கு நிதியுதவி

மாநில முதலவர் மேதகு லிம் குவான் எங் திருமதி உஷாவிடம் காசோலை வழங்கினார். (உடன் முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் ஹஸ்னோன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ)

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அகால மரணம் அடைந்த ஆகாயப் படை விமானி மேஜர் திரு கயாம்பு குடும்பத்தினருக்கு ரிம30,000 நிதியுதவி வழங்கினார். ஆகாயப்படை விமானி திரு கயாம்பு கடந்த 21/12/2016-ஆம் நாள் மலேசிய ஆகாயப்படைக்குச் சொந்தமான விமானத்தை பெங்கலான் உடாரா, பட்டவோர்த் தளத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி மரணம் எய்தினார்; அதேவேளையில், அவருடன் பயணித்த ஹம்டி அமாட் ஹனபி, கப்டன் வாய் லிக் மற்றும் அதிகாரி முகமது சோபி அசிசான் ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில அரசாங்கத்தின் நிதியுதவி பெற்றுக்கொள்ள திரு.கயாம்புவின் தந்தை திரு.செல்லம் மற்றும் துணைவியார் திருமதி உஷா, 43. வருகையளித்தனர். மாநில அரசு இந்த விபத்தில் காயமடைந்த 3 அதிகாரிகளின் குடும்பத்திற்கும் தலா ரிம5,000 நிதியுதவி பெற்றுக்கொள்ள அவர் தம் குடும்பத்தினர் வருகையளித்தனர்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவருக்கு மரியாதை மற்றும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு நிதியுதவி வழங்கியதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் முதல்வர்.
தங்கள் மகன் இந்திரன், 13 ஒரு விமானியாக காண வேண்டுமென்று ஆசை கொண்ட தனது கணவரின் அகால மரணச் செய்தி துயரக்கடலில் விழ வைத்தது என முத்துச்செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் இணைந்து நிதியுதவி வழங்கினர்

அன்னாரின் துணைவியார் திருமதி உஷா, அரசு சுகாதார கிளினிக்கில் தாதியராகப் பணிப்புரிகிறார். இனி தனது கணவர் விட்டு சென்ற குடும்ப பொறுப்பு அனைத்தையும் தாம் ஏற்பதாகவும் தனது 4 பிள்ளைகளையும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அயராது பாடுபடுவேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார். தனது கணவரின் மறைவுக்கும் பின் திரு கயாம்புவின் பெற்றோர்களையும் கவனிக்க வேண்டும் என்றார், ஏனெனில் திரு கயாம்பு அவரது பெற்றோருக்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் இணைந்து திரு கயாம்புவின் இல்லத்திற்கு வருகையளித்து இரங்கல் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அன்னாரின் குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்கினர்.

இதனிடையே, மேஜர் கயாம்புவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தி தின் மற்றும் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் திரு குமரேசன் வருகை அளித்தனர்.

மாநில அரசு வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் திரு கயாம்புவின் குடும்பம் தலை வணங்குவதாகத் தெரிவித்தார்.