பத்து கவான் – பினாங்கு மாநிலத்தின் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இந்தோனேசியா, ஜகார்த்தாவில் நடைபெற்ற ‘Road to Codeavour 7.0’ அனைத்துலகப் போட்டியில் பங்கேற்று ஆறுதல் பரிசை வென்று பள்ளி, பினாங்கு மற்றும் மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
20 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்ற இந்த அனைத்துலகப் போட்டியில், மலேசியாவிலிருந்து 16 அணிகள் மட்டுமே தகுதி பெற்றிருந்த நிலையில், தமிழ்ப்பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்திய பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களது திறமையை உலக அரங்கில் நிரூபித்துள்ளனர்.
மாணவர்கள் உருவாக்கிய “Ecobot Sorter” எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மார்ட் குப்பைத்தொட்டி, உலோகம், மட்கக்கூடிய பொருட்கள், காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் மின்னணு கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகை கழிவுகளை தானாக அடையாளம் கண்டு தனித்தனியாகப் பிரிக்கும் திறன் கொண்டது.
இத்திட்டம் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டிய புறப்பாட ஆசிரியை பிரேமா கூறுகையில், இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவுப் பொருட்களின் சரியான பிரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
“வீடுகளிலும் பள்ளிகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் பொருட்களை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தின் மூலம் கழிவுகளை வேகமாகவும் துல்லியமாகவும் அடையாளம் கண்டு பிரித்துவைக்க முடியும்,” என்று தெரிவித்தார்.
மேலும், “மின்னணு கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், அவற்றை முறையாகப் பிரித்து நிர்வகிக்கும் நடைமுறை இன்னும் குறைவாகவே உள்ளது. அதனை மாற்றுவதற்கான ஒரு செயல்முறைத் தீர்வாகவே ‘Ecobot Sorter’ உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தக் கண்டுப்பிடிப்பினை சந்தையில் விற்பதற்கான நடைமுறைகள் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.
“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் STEM, ரோபோடிக்ஸ், குறியீட்டியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் அனைத்துலக அளவில் சாதிக்க முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. எதிர்கால தொழில்நுட்பம் உலகிற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் கல்வி முதலீடுகளின் பயனை இந்த சாதனை வெளிப்படுத்துகிறது.
“மேலும்,இப்பள்ளியில் அதிகமான மாணவர்கள் STEM போன்ற போட்டிகளில் வெற்றியடைய பள்ளி நிர்வாகம் அறிய முயற்சிகளை கையாண்டு வருகின்றது”, என பள்ளியின் தலைமையாசிரியர் முகிலன் தெரிவித்தார்.
இப்போட்டியில் பங்கேற்ற மாணவன் கோமகன் (வயது 10), பிரஷித்தா பிரியா (வயது 10) மற்றும் திவ்யா ஶ்ரீ (வயது 11) ஆகிய மூன்று மாணவர்களும் இத்திட்டத்தை உருவாக்க மாணவர்கள் சுமார் இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு பெற்றோர் மற்றும் பள்ளியின் பெற்றோர்ஆசிரியர் சங்கம் (PIBG) வழங்கிய ஒத்துழைப்பும் வரவேற்கத்தக்கது என முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தனர்.
முதல் முறையாக அனைத்துலக போட்டியில் பங்கேற்ற இந்த மாணவ குழுவினர் முன்னதாக பல சாதனைகளைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துலக அரங்கில் பதற்ற நிலை சவாலாக இருந்தாலும் வெற்றிப் பெற வேண்டும் எனும் வேட்க்கையில் தங்களது படைப்பை வழங்கி ஆறுதல் பரிசினை வென்று தாயகம் திரும்பினர்.
மாணவர்களின் ஜகார்த்தா பயணத்திற்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜூ நிதியுதவி வழங்கியதுடன், பல்வேறு தரப்பினரும் ஊக்கமும் ஆதரவும் வழங்கியுள்ளனர்.
இந்த சாதனை, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைக்கும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் ஒற்றுமையான ஆதரவிற்கும் கிடைத்த வெற்றியாகப் கருதப்படுகிறது.